tamilnadu

img

ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி.... தொழிலாளர்களை சாதிவாரியாக பிரிப்பதைக் கண்டித்து ஆவேசப் போராட்டம்....

சென்னை:
ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பயனாளிகளை சாதிவாரியாகப் பிரித்து வேலை, ஊதியம் வழங்கிட முயற்சித்து வருவதைக் கண்டித்தும், இதனை உடனே ரத்து செய்யக் கோரியும் திங்களன்று (ஜூன் 21) நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தியது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற்றது.கடந்த பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற ஒன்றியஊரக வளர்ச்சித் துறையின் ஊரக வேலைத் திட்டப்பிரிவு நடத்திய கூட்டத்திலும் - மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்களுக்கு கடிதம் மூலமும் ஊரக வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளை சாதிவாரியாகத் தொகுத்து அனுப்புமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் கூலி வழங்கிடவும், தொழிலாளர் பட்ஜெட்டை அதனடிப்படையில் தயாரிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. 2021 ஏப்ரல் 1 முதல் பல மாநிலங்களில் இதன் அடிப்படையில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டும் உள்ளது.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை சாதிவாரியாக கூறுபோட்டு தனது அரசியல் சுயலாபத்திற்குப் பயன்படுத்தும் போக்கு ஆகும். மேலும் அனைவருக்கும் 100 நாள் வேலையும் முழுமையான சம்பளமும் வழங்குவதிலிருந்து தனது பொறுப்பைத் தட்டிக்கழித்திடவும் நிதி ஒதுக்கீட்டை குறைத்திடவும் மேற்கொள்ளும் மோசமான செயலாகும். கிராமப்புற மக்களுக்கு அவர்களின் வறுமையை போக்கிட கொண்டு வரப்பட்ட சட்ட அந்தஸ்து கொண்ட இந்த திட்டத்தைசிதைப்பதையும் சீரழிப்பதையும் அனுமதிக்க முடியாது.எனவே, மாநிலம் முழுவதும் அகில இந்தியவிவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து மாவட்டத் தலைநகரங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன இயக்கத்தை நடத்தியது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விதொச மாநிலத் தலைவர் ஏ.லாசர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, நாகப்பட்டினத்தில் விதொச மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், புதுக்கோட்டையில் விதொச மாநிலப் பொருளாளர்எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையேற்றனர். சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் மனு அளித்தனர். 

;