tamilnadu

முதல் ராஜாதி ராஜன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேலூர், ஏப்.6-சோழர் காலத்தைச் சேர்ந்த முதல் ராஜாதிராஜன் கல்வெட்டு காவேரிப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.முதல் ராஜாதிராஜன், முதல் ராஜேந்திர சோழனின் மகனும், முதல் ராஜராஜனின் பேரனும் ஆவார். அவர் கி.பி. 1018 முதல் கி.பி. 1054 வரை கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்டதுடன் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி புரிந்துள்ளார். இவர் பாண்டியர், சேரர், சிங்களர், மேலை சாளுக்கியர் ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த அரசருக்கு ஜெயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராஜேந்திரவர்மன் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. அவரது காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று ஆசிரியர்கள் ஆ.குருநாதன், தி.கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் மாரியம்மன் எனும் மூலத்து வாழியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இந்தக் கல்வெட்டு 4 கற்பலகைத் துண்டுகளில் வெட்டப்பட்ட நீண்ட கல்வெட்டாகும். ஆனால், இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற இரண்டு துண்டுகள் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பன்றீசுவரர் கோயிலும், பிடாரி கோயிலும் அக்காலத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;