tamilnadu

img

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை(என்டிடிஎப்) நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக- பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல் அந்த மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில், வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்நுட்பக்கல்வி, ஐடிஐ படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மலைப்பகுதிகளில் இயங்கிவரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர்,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

13.2.2024 ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை நிறுவனத்தின்(என்டிடிஎப்) மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான இசட்எப் ரானே ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள சாந்தி கியர்ஸ் லிமிடெட், எச்டிபி நிதி சேவைகள், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐ) குன் கேபிடல் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் சிஎன்சி பிரிவில் 67 இளைஞர்களும், சிஆர்எம் பிரிவில் 79 இளைஞர்களும் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்கி, வாழ்த்தினார்.பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், வளர்ச்சித் துறை ஆணையர், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.