tamilnadu

ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு

சென்னை, மே 15- தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான ‘டெட்’ ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 28-2-2019 அன்று தேதி வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற தளத்தில் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைய தளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆம் தேதி முதல் தாள் தேர்வு மற்றும் 9 ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ல் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கான (2018) தேர்வு நீதிமன்ற வழக்கு காரணமாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.