tamilnadu

img

எதிர்க்கட்சிகளை எதிரிகளாகக் கருதும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருந்தபோது, மைக் நிறுத்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர் நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங் கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,  ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜேஎம்எம் - காங் கிரஸ் கூட்டணி ஆளும் ஜார்க் கண்ட் மாநிலத்தின் ஹேமந்த் சோரன் 8  மாநில முதல்வர்கள் அறிவித்தனர். தொடர்ந்து வியாழனன்று மேற்கு வங்க முதல்வரும் மம்தா பானர்ஜி ஜூலை 27  அன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். ஆனால் திடீரென நேற்று, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, ஒன்றிய அரசின் பாகுபாட்டை கண்டிக்க உள்ளதாக என மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக்கொண்டார். அக்கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதை தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“இதுதான் கூட்டாட்சி தத்துவமா? ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் நடத்துவீர்களா? எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் என்பதை ஒன்றிய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிகளாகக் கருதி அவர்களது குரல்களை நசுக்கக்கூடாது”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.