tamilnadu

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துக!

சென்னை, ஜூன் 26 - 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துமாறு, பாஜக தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலி யுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

சாதி வாரி- சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பு அவசியம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு  வந்த அந்த தனித் தீர்மானத்தில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இந்தச் சட்டமன்றம் கருதுகிறது. 

எனவே, 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்தே நடத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்தச் சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

குரல் வாக்கெடுப்பு

முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்தும், வரவேற்றும்- சில திருத்தங்கள் வேண்டும் என்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் 10 பேர் பேசினர். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த தீர்மானம்  ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றாலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீட்டுத் தேவையின் அடிப்படையில், பட்டி யலினத்தவர் மற்றும் பழங்குடியினத் தவரின் மக்கள் தொகை விவரம் மட்டும் சேகரிக்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டவர்கள் உட்பட பிற சாதியினர்  குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வில்லை.

பட்டியலினத்தவர், பழங்குடி யினத்தவருக்கு இட ஒதுக்கீடு பல்லாண்டு  காலமாக அமலில் இருந்தாலும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக குரூப் 3 மற்றும் 4 பிரிவு களில் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி யின மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் உயர் பதவிகளில் இன்னமும் வர முடியவில்லை. 

பிற்படுத்தப்பட்டோருக்கான  இடஒதுக்கீடு கோரிக்கை

இதற்கிடையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வது குறித்து பரிந்துரைக்க அமைக்கப் பட்ட மண்டல் கமிஷன் தனது அறிக்கையை 1980-ஆம் ஆண்டு அன்றைய ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது  என்றாலும் அவை அமலுக்கு வரவில்லை. 

இந்தியப் பிரதமராக பதவியேற்ற வி.பி. சிங், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அதனை நடை முறைக்கு கொண்டு வந்தார். அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், இந்த பரிந்துரையை அமல்படுத்த விடாமல் நாடு முழுவதும் கலவரத்தை தூண்டிவிட்டது பாஜக. மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டன. 

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் 

இதில், ஒருவர் பிற்படுத்தப்பட்டவரா? என்பதை அறிய, சாதியை ஒரு அளவீடாக ஏற்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் 1992-இல் தீர்ப்பளித்தது. ஆனால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்றும் கூறிவிட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு  என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டு சமூக நீதி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகளை இன்று வரைக்கும் ஒன்றிய பாஜக அரசு வெளியிடாமல்உள்ளது.

கணக்கெடுப்புக்கு மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு

இந்தச் சூழ்நிலையில் தான், சாதிவாரியான கணக்கெடுப்பும் சமூக - பொருளாதாரக் கணக்கெடுப்பும் மிக முக்கியம் என்பதால், இந்த முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டு விடுதலைக்கு முன்பு 1865-இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்த வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872-இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது என்றாலும் வங்க மாகாணத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை. இதற்குப் பிறகு, 1881-இல் முதல் முறையாக, அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று தரவுகள் கூறுகின்றன. அதைத்தொடர்ந்து, 1881 முதல் 1941 வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாக, 1941-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு முழுமையாக நடக்கவில்லை. இதனால் 1931-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடைசியாக எடுக்கப்பட்ட முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.





 

;