tamilnadu

img

ஆம்பூர் அருகே மலை அடிவாரத்தில் மண் கொள்ளை

ஆம்பூர், பிப். 10- ஆம்பூர் அருகே கதவாளம் மலை அடிவாரப் பகுதியில் இருந்து மண் மற்றும் மொரம்பு மண் ஆகியவற்றை நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலம் சாலை மற்றும் விவசாய நிலங்கள் வழியாக தினசரி கடத்தப்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.   இதனால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, கனிமவள அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் செயல்படும் குவாரியின் உரிமத்தை வைத்துக்கொண்டு இங்கு மண் எடுக்கப்படுவதாகவும், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இதுகுறித்து ஆம்பூர் வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தின் போலி உரிமத்தை வைத்து அவர்கள் மண் கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தனர்.