tamilnadu

சிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது (89).மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழ வெள்ளமலைப்பட்டியில்  1932-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி தா.பாண்டியன் பிறந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.1953-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் தொடங்கப்பட்டது. அதன் முதல் பொதுச் செயலாளராக தா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். கலை இலக்கியப் பணியை நிறைவேற்ற விரிவுரையாளர் பணியிலிருந்து விலகி சென்னை வந்தார். அங்கு அவர் சட்டக் கல்லூரி மாணவரானார்.

1962-ஆம் ஆண்டு சிபிஐ சென்னை மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989-முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகள் செயல்பட்டார். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களிலும் செயல்பட்டார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மாநிலச்  செயலாளர், தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் புலமை பெற்றவர். ஜனசக்தி  இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
மறைந்த தோழர் தா.பாண்டியனின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை அண்ணாநகர், டிவிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். மதியம் இரண்டு மணிக்கு அவரது உடல் சென்னையில் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு (பாலன் இல்லம்) எடுத்துவரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தா.பாண்டியன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது.

இறுதி நிகழ்ச்சி
அவரது இறுதி நிகழ்ச்சி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளமலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணைத் தோட்டத்தில் சனிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் நடைபெறுகிறது. அவரது மறைவையொட்டி மார்ச் 4ஆம் தேதி வரை கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி செய்யப்பட்டுள்ளன.

;