tamilnadu

img

நூலாற்றுப் படை

சமகால சமூக, அரசியல் அசைவுகளுடன்

ஊஞ்சலென்பது சொகுசான மன நிலையில் அந்தரத்தில் மிதந்தாடு வது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள் செல்வ மதிப்பை பொருத்தது. எங்கள் தெருவில் ஊஞ்சல் வைத்த வீடொன்று ஒரு காலத்தில் இருந்தது. வயதான கிழவனும் கிழவியும் அதில் தலை சாய்த்து ஊஞ்சலாடிக் களிப்பார்கள். நல்ல விளைந்த தேக்குமரப் பலகையில் செய்யப்பட்டது. கனத்த சங்கிலி நாற்புரமும் பூட்டி மிகப் பாதுகாப்பானதாக இருக்கும். முதியவர்கள் காலமானதற்குப்பின் இப்போது அது எங்கே இருக்கிறது என்று தெரிய வில்லை. ஆனாலும் அது என் நினைவில் இன்று  வரை ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  சமூகம் சந்திக்கும்  பிரச்சனைகள் குறித்த கட்டுரைகளை இடையிலாடும் ஊஞ்சலாக்கி தந்திருக்கிறார். தலைப்பு கவித்துவமாகவும் உள்ளடக்கம் அர்த்தப் பூர்வமானதொரு கட்டுரையாகவும் ஒளிர்கிறது. அட்டைப் படத்தை இன்னும் அழகியலாக யோசித்திருக்கலாம்.

மொத்தம் 34 கட்டுரைகள் இந்து தமிழ் திசை நாளிதழிலும் மாலைமலர் நாளிதழிலும் வெளிவந்த கட்டுரைகள் சிறிதும் பெரிதுமான கட்டுரைகள்.இலகுவான எழுத்து நடை என்பதால் எவரும் எளிதில் வாசிக்கலாம்.

முதல் கட்டுரையே சம காலத்தில் பேசிக் கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும் அபத்தத்தை கண்டிக்கிறது. இன்றைய ஆளுநர் ரவி வகை யறாக்கள் இன்றும் கூட கால்டுவெல்லை திட்டி வேத மொழி அரிப்பை சொரிந்து கொண்டிருக்கும் காட்சியை காண்கிறோம்.

புதுக்கோட்டை துறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சமூக அருவருப்பு மிகுந்த கட்டுரையும், திருநெல்வேலி நாங்குநேரியில் சின்னத்துரையையும் அவன் தங்கையையும் தாத்தாவையும் வெட்டிச் சாய்த்த சாதீய வெறியர்களின் கொடூரங்களை கண்டித்தும் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சாதியும் மதமும் எக்காலத்திலும் அகற்ற முடியாத பெரும் தீங்கென வளர்ந்து வருவது நாகரீக சமூகமென்று நாமெல்லாம் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்திற்கு தீரா இழுக்கை தருகிறது என்பதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

வாசிப்பும், வாசிப்பு பழக்கமும் ஒரு தீயாய் பற்றி பரவுவதற்கு ஒரு சிறு பொறியாய் தமிழக மெங்கும் சுற்றிச் சுடர்கிறார். மனிதர்கள் வாசிக்கத் துவங்கினால் சமூகக் கேடுகள் யாவும் தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இரண்டு கட்டுரைகளில் நம்பிக்கை வார்த்தை களை விதைத்திருக்கிறார். சுயநலமாக நான்கு புத்தகங்களை எழுதி எண்ணிக்கையை கூட்டி விட்டு ஒரு சாகித்ய அகாடமியோ அரசின் இன்ன பிற விருதுகளை பெற முயற்சிக்காமல் தான் பெற்ற கல்வி சமூகமும் பெற்று பயன் பெற வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வமும் உந்தித்தள்ள இன்று ஒரு பெரும் படையையே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார். நாளைய இளைஞர்களுக்கு பெரும் ஆதர்சமாக ஆசானாக விளங்குவார் என்பது பொய்யில்லை.

மணிப்பூர் வன்முறையும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாபாதக நிகழ்வு களையும் இன்று வரை வாய்மூடி மெளனியாக இருக்கிற காவி பிரதமரையும் ஓரிரு கட்டுரைகளில் மிக அழுத்தமாகவே சாடியிருக்கிறார். கேளாச் செவியினருக்கு தேர்தல் ஒன்றே பாடம் புகட்டும் அருங் கருவியென கொள்வோம்.

தினங்கள் குறித்தொரு கட்டுரை, விவசாயிகளின் போராட்டங்கள், நோபல் பரிசு,  சின்னப்ப பாரதி, பகத்சிங், வன்முறை கல்வி, பட்டினிக் குறியீடு, ஈரானியப் பெண்கள் எனப் பரவலான தலைப்பில் மிகச் சுருக்கமாக செய்திகளை சொல்லிச் செல்கிறார்.

 சமகாலத்திற்கு பொருத்தப்பாடாக பல கட்டுரைகள் இருப்பது சிறப்பு.
 

இடையிலாடும் ஊஞ்சல்
ஆசிரியர் - ச.தமிழ்ச்செல்வன்
பக்கம் - 144/ விலை ரூ.140
வெளியீடு - பாரதி புத்தகாலயம்

ஒதுங்கிப்போகாமல்  சமூகப் பொறுப்பை உணர்வோம்

கல்வி, மனநலம், உடல்நலம், பாலின சமத்துவம், தொழிலாளர், சமூகம், சுற்றுச்சூழல், மனித நேயம் போன்ற எட்டு தலைப்புகளில் 31 கட்டுரைகளைத் தந்துள் ளார் மூத்த பத்திரிகையாளர்  ப. திருமலை.

சமூகப் பொறுப்பின் அடிப்படையான பண்பு என்பது சக மனிதனை மதித்தல். சமூகத்தில் சாதிய வன்முறை, பாலின பாகுபாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்,  அவர்களுக்கான கல்வி மறுப்பு, பெண்கள் மீதான வன்முறை, வேலை இல்லா திண்டாட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சம்பவங்கள் எதனையும் கண்டு கொள்ளாமல் “நமக்கு எதற்கு  வம்பு” என கடந்து சென்று விடும் போக்கு உள்ளது. மனிதநேயம் எல்லா நிலைகளிலும் குறிப்பாக நம்  குடும்பத்தில் தொடங்கி எல்லோ ரிடத்திலும் வெளிப்பட வேண்டும். ஒவ்வொரு வரும் ஒதுங்கிப் போகாமல் தனது பொறுப்பை உணர்ந்து நிறைவேற்றினால் இச்சமூகம் அனைத்து நிலைகளிலும் மேம்படும் என்பதை மிக வலுவாக தனது கட்டுரைகள் மூலம் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.

பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் உரை யாடல் என்பது குறைவாகத்தான் உள்ளது.  பெண் கல்வி என்பது மிக அவசியமானது.  மரியாதையையும் சமூக அந்தஸ்தையும் தரவல்லது. சுயமாக நின்று வாழ கல்வி வழிவகுக்கும். ஒட்டுமொத்த சமூகத்தை மேம்படுத்த கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் நூலாசிரியர். துப்புரவுத் தொழிலாளர்கள் அடையும் துயரம் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் புள்ளி விவரங்கள் மூலம் விரிவாக அலசுகிறது இவரது கட்டுரைகள். அதுபோன்று குழந்தை தொழிலாளர்களின் அவலம் குறித்தும் ஏராளமான தகவல்களோடு பதிவு செய்துள்ளார்.  

இந்தியாவில் காற்று மாசுபாட்டின் காரணமாக உள்ள ஆபத்துக்களை ஏராளமான புள்ளி விவரங்கள் மூலம் விவரிக்கிறார். உலக அளவில் ராணுவத்திற்கு செலவிடுவது கடந்த 20 ஆண்டுகளில்  75 சதவீதம் அதிகரித்துள்ளது.  ஆயுதங்கள் விற்கப்படுவதும் வாங்குவதும் எதற்காக? சக மனிதனை அழிப்பதற்குத் தானே!

ஆயுதங்களுக்குச் செலவிடும் தொகையை கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற வற்றிற்கு மனிதநேயத்துடன் செலவிட்டால் புத்தம் புதிய பூமி மலரும். இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு பன்முகத் தன்மை.  மனிதநேயமே மகிழ்ச்சிக்கான பாதை. மனித நேயம் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்கும். அவசியம் இந்நூலை வாசிப்போம். சக மனிதர்களை மனிதநேயத்துடன் நேசிப்போம்.

“நமக்கு எதற்கு வம்பு”
நூலாசிரியர் : ப. திருமலை
விலை:ரூ.200/-
வெளியீடு: மண் மக்கள் மனிதம், 
மதுரை -625016
தொடர்பு எண்:  9865628989

கதைகள் வழியே அறிவியல் கருத்துக்கள்

நம் வீட்டில் வளரும் ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் பெண்குட்டி போட்டால் மகிழும் இச்சமூகம், ஒரு பெண்ணுக்கு பெண்  குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையை யும் சுமையாக கருதி வெறுத்து ஒதுக்குகிறது.

பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான் பொது பள்ளிக்கூடம் கட்டினர். அதன் பின்னர் தான் பெண்களும் படிக்கும் சூழல் ஏற்பட்டது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க இயலாது.  மற்ற சமூக குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 பிரிட்டிஷார் அனைவருக்கும் கல்வி என்று  கொண்டு வந்த பின்னரே பள்ளிகளில்  அனைத்து சமூகத்தவரும் ஒன்றாய் படிக்கும் சூழல் ஏற்பட்டது என்பதை நூல் ஆசிரியர் அருமையாக பதிவு செய்துள்ளார்.

அரசு வழங்கும் இலவசம், அது போல கல்வி உதவித்தொகை  ஏழைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதும், சமூக உண்மைகளையும் அறிவியல் கருத்துக்களையும் குட்டி குட்டி கதைகள் வழியாக குறிப்பாக அம்மா மகளுக்கு எழுதிய கடிதம் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர்.
 பூப்படைதல் என்றால் என்ன ? கருத்தரித்தல் என்றால் என்ன?  பெண்களுக்கான உணவு, பெண்களின் உடை, சுகாதாரம், பெண்களுக்கான அரசியல், பெண்களுக்கு கல்வி ஏன் அவசியம்? அரசு வழங்கும் இலவசங்கள் ஏன் அவசியம்?  தீண்டாமை என்றால் என்ன? சாதிய பாகுபாடு, மதபாகுபாடு , மூடநம்பிக்கைகள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக கதை வடிவில் கொண்டு வந்துள்ளது அனைவரும் எளிமையாக வாசிக்கத் தூண்டுகிறது இந்த நூல்.

“அன்புள்ள மகளே”
நூலாசிரியர் :  இரா. தட்சிணாமூர்த்தி
விலை : ரூபாய் 90/- 
வெளியீடு :  பாரதி புத்தகாலயம் சென்னை -600018.
தொடர்பு எண்: 044 24332424