தமிழ்நாடு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில், வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும், இந்த ஒப்பந்தத்தை கைவிட வலியுறுத்தியும் ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், இதற்கு எதிராக மக்களவையிலும் குரல் கொடுத்தார். இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்றும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இந்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், “நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. அமையும் சூழல் ஏற்பட்டால் முதலமைச்சர் பொறுப்பிலேயே நான் இருக்க மாட்டேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.