tamilnadu

img

சிஏஏ சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... பேரவையில் நிறைவேறியது...

சென்னை:
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தும் அரசியல் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை (செப்டம்பர் 8) முதலமைச்சர் மு. க‌.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

“ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது.  மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின்நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்துமக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்கா மல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019-ஐ, ரத்து செய்ய ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” எனும் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார்.

முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. அதிமுகஅவையில் இல்லை. பேரவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக வரவேற்று ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

;