tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் “அமோக” விற்பனை.... ரூ.3 ஆயிரம் மதிப்புடைய மருந்து ரூ.12 ஆயிரம்

சென்னை:
கொரோனா  சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  ரெம்டெசிவிர் மருந்தின் விலை, சென்னையில் மூன்று மடங்கு அதிகரித்து விற்கப்படுகிறது.ரூ.3,000 முதல் ரூ. 5,000 வரை (ஜி.எஸ்.டி உட்பட) செலவாகும் ஒரு குப்பியின் விலை, ‘கள்ளச்சந்தை’ மூலம் ரூ.12,500 முதல் ரூ.13,000 வரை விற்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு தெரிவித்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறிஉள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்தமருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.கொரோனா இறப்பு விகிதங்களைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், டோசிலிசுமாப்  போன்ற மருந்துகள் கிடைக்கஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால்,தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.மருந்துகள் கிடைக்காத நிலையில், மருந்தை வெளியில்  வாங்கிவருமாறு நோயாளிகள்நிர்பந்திக்கப்படுகின்றனர். கள்ளச்சந்தையில் மருந்தைப் பெறுவதற்கான  உதவிகளை ( ஏஜென்ட்முகவரி, தொலைபேசி எண்) சில மருத்துவர்களேசெய்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா  தெரிவிக்கிறது.

திருச்சிராப்பள்ளியில்  உள்ள ஒரு கொரோனா நோயாளி,  தான் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனையில்  ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால், முகவர் மூலம்  ஆறு குப்பிகளை ரூ.75,000 கொடுத்து வாங்கியுள்ளார்.    இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் சி.என்.ராஜா, தமிழ்நாடு சுகாதாரத் துறை,தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு இந்த புகாரை கொண்டு சென்றதாகவும்  டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் கே.சிவபாலன் கூறுகையில், “இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை.  நோயாளிகளுக்கு இந்த மருந்து நேரடியாக கிடைக்க வாய்ப்பில்லை. மருந்து சில்லறை விற்பனைக்கு வரவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான்  கிடைக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது போல் எந்தப்புகாரும் எங்களுக்கு வரவில்லை. கள்ளச்சந்தையில் இந்த மருந்து கிடைக்காது. எனினும், குறிப்பிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.மதுரையில் உள்ள ‘ஒரு முகவரை’ அழைத்தபோது, அவர் நாட்டின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக ரெம்டெசிவிர் அல்லது டோசிலிசுமாப் மருந்துகளை கூரியர் மூலம் அனுப்பலாம்.

ஒருவர்எவ்வளவு எண்ணிக்கையும் ஆர்டர் செய்யலாம்எனக்கூறியதோடு  தனது பெயர், தனது நிறுவனத்தின் முகவரி மற்றும் கிடைக்கும் மருந்துகளின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஒரு ‘முகவர்’ ஒரு தனியார் மருத்துவமனையின் ஊழியர் என்று கூறி ஒரு ரெம்டெசிவிர் குப்பியை ரூ.13,000-க்கு விற்கிறார்.டெம்டெசிவிருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளபோது அவர்களுக்கு எப்படி மருந்து கிடைத்தது என்று வினவியபோது, எல்லா இடங்களிலும்  முகவர்கள் அதை உற்பத்தியாளரிடமிருந்தே நேரடியாக வாங்கியதாகவும், அதிக தேவை இருப்பதால் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் சி.என்.ராஜா கூறுகையில், “மருத்துவர்களால் கூட அதை வாங்க முடியவில்லை, ஆனால் முகவர்களால் அதை வாங்கமுடியாது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவர் ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் மருந்துகள் கள்ளச் சந்தையில் எளிதில் கிடைக்கின்றன என்று எனக்குத் தெரிவித்தார். எனவே நான் அதன் உண்மைத் தன்மையை அறிய முடிவு செய்து ஒரு முகவரைஅழைத்தேன். அவரோ, “கொரோனா பாசிட்டிவ் சோதனை அறிக்கையையும் நோயாளியின் ஆதார் அட்டையின் நகலையும் அனுப்பினால், உடனடியாக மருந்துகளை கூரியர் மூலம் அனுப்புவதாகக் கூறினார். அரசாங்கம் கள்ளச் சந்தைக்குமுற்றுப்புள்ளி வைத்து எம்ஆர்பியில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய ஒரு முகவர்பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு மருந்தகத்தை நடத்திவருகிறேன். உற்பத்தியாளரிடமிருந்து மருந்தை வாங்கியுள்ளேன். மருத்துவமனைகள் கூட என்னிடமிருந்து மட்டுமே வாங்குகின்றன. எனவே நீங்கள் மருந்தை நம்பலாம் எனக்கூறியுள்ளார்.இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கியுள்ளது. போதுமான இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகள் மருந்துகளை வாங்க விரும்பினால் அதற்கு உரிய ஏற்பாடுகளை அரசால் செய்ய முடியும், ரெம்டெசிவிர் ஒரு குப்பியை அரசாங்கம் ரூ.3,000-த்திற்கு வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

;