tamilnadu

img

3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை

சென்னை:
நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரையில்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்வரத்து போதுமானதாக இருந்தது. அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை நெல் சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

அதேபோல், பொதுப்பணித் துறை ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு கால்வாய்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் ‘சி’ மற்றும் ‘டி’ பாசன வாய்க்கால்களும் உரிய காலத்தில் தூர்வாருவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.திருந்திய நெல்சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களாலும், சமுதாய நாற்றங்கால் முறையினாலும், நெல் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.அரசின் இத்தகைய முன்னேற்பாடு நடவடிக்கைகளால் நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்டு 3ஆம் தேதி நிலவரப்படி 3.870 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டை விட 1.067 லட்சம் ஏக்கர் அதிகமாகும். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவே ஆகும்.மேலும், பயிர் இழப்பிலிருந்து டெல்டா விவசாயிகளை பாதுகாப்பதற்காக, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசு திருவாரூர், நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 270 வருவாய் கிராமங்களை கூடுதலாக பயிர்க் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்து, இதுவரை 1.68 லட்சம் ஏக்கர் பயிர்க்காப்பீடு செய்யப் பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்யப்பட்டதைவிட 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.தமிழ்நாடு அரசு உரியகாலத்தில் எடுத்த நடவடிக்கைகளின் காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத சாதனையாக நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3.870 லட்சம் ஏக்கரிலிருந்து 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;