tamilnadu

img

குடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை....

சென்னை:
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை ரேசன் அட்டைகளாக மாற்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளில் சுமார் 1.5 லட்சம் அட்டைகள் முன்னுரிமை இல்லாத  அட்டைகளாக உள்ளன.  இவ்வகை அட்டைதாரர்களுக்கு அரசு சமீபத்தில் வழங்கிய கொண்டைக்கடலை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் கிடைப்பது இல்லை. இதனால், இக் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

வழக்கு ஒன்றில் தில்லி உயர்நீதிமன்றம் 2020 ஜூலை மாதம் மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் 2020 ஆகஸ்ட் மாதம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.“மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர்” என்பதை அக்கடிதத்தில் மத்திய அரசு அங்கீகரித்துள் ளதுடன், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் “அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில்” உணவுப் பொருட்கள் பெற்றிட தகுதி உடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னுரிமை அட்டை  கட்டாயம்
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை ரேசன் அட்டைகள் வழங்குவது கட்டாயம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறோம். எனவே, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களின் குடும்ப அட்டைகள் அனைத்தையும் முன்னுரிமை அட்டைகளாக தமிழக அரசு மாற்றி வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு  முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 

;