tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை அரசாணை வெளியீடு

சென்னை,ஜூலை 08- தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து புதனன்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.  சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப் பட்டு வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட  வழக்கை  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படையினரும் தந்தை, மகனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.   காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவுக்காக 1993 ஆம் ஆண்டில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறப் பட்டது. ஆனால்  கைதிகளை தாக்குவதும் பொது மக்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் மதவாத அமைப்பின் பின்னணியுடன் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு  கட்சியினரும் வலியுறுத்தினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய த்தில் சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய  பிரண்ட்ஸ்  ஆஃப் போலீசாரிடம் விசாரணை  நடத்துவோம் என்று சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார். பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா? என்றும், சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? என்றும் மாநில மனித  உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி, பதிலளிக்கும்படி டி.ஜி.பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.  அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர் போராட்டத்திற்கு திட்ட மிட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ்  ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு தடை விதித்து,அரசாணை வெளியிட்டுள்ளது. 

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வாலிபர் சங்கம் வரவேற்பு
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய, எந்த சட்ட வரையறைக்கும் உட்படாத பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக  தமிழகம் முழுவதும் ஜூலை 4 அன்று போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  சில மண்டல, மாவட்ட வாரியாக ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்து காவல்துறை அதிகாரிகள் உத்தரவு வெளியிட்டனர். ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை  நிரந்தரமாக தடை செய்து உத்தரவிட வேண்டுமென  வலியுறுத்தி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலை வர்களிடம் மனு அளிக்கும்  போராட்டத்தை ஜூலை 6 அன்று  மீண்டும் நடத்தியதுடன் தொடர் போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை  தடை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இம்முடிவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக வரவேற்கிறோம்

 

;