tamilnadu

img

பாக்கித்தொகை வழங்குக.... கோட்டையை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்...

சென்னை:
தமிழ்நாட்டில் விளை நிலங்களில் அமைக்கப்படும் உயரழுத்த மின் கோபுரங்களுக்கு, நிலத்திற்கான இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிட அரசாணை வெளியிடக் கோரியும், எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிடுவதாக அரசு தாமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,விவசாயிகள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை வியாழனன்று (பிப்.11)  நடத்தினர்.

கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தரவேண்டிய ரூ.2000 கோடி பாக்கித் தொகையை அரசு பெற்றுத்தரக் கோரியும் இந்தப்போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கூட்டியக்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் மறித்து அனைவரையும் கைது செய்தனர்.போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துளசி மணி, அகில இந்திய மகா சபை சந்திரமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் டி.ரவீந்திரன், சாமி.நடராஜன், டில்லிபாபு, துளசிநாராயணன், ஏ.வி.ஸ்டாலின் மணி, மதுசூதனன், ஏ.எம்.முனுசாமி உட்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கோரிக்கைகள்
 அரசாணை எண் 54ன் படி உயர்மின் அழுத்த கோபுரத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்,  2013ஆம் ஆண்டின் நிலஎடுப்பு சட்டப்பிரிவு 30ன் அடிப்படையில்  மாத வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும்,  திட்டப்பாதையில் உள்ள துரவு கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அனைத்து வகையான இழப்பீட்டு தொகையையும் முழுமையாக செலுத்திய பிறகே திட்டப்பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும்.  இனிமேல் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை சாலை ஓரமாக கேபிள் மூலம் நிறைவேற்ற வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள ரூ.2ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை பெற்றுத்தரவேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை
போராட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் ரூ.1750 கோடி நிலுவைத்தொகை தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டியுள்ளது. இதுநாள் வரை தமிழ்நாடு அரசு இந்த தொகையை வசூலித்துத் தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை, மாறாக தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் அரசுக்கு  சவால் விடும் அவலம் உள்ளது. ஆகவே முதலமைச்சர் உடனே தலையிட்டு கரும்பு நிலுவைத்தொகையை பெற்றுத்தரவேண்டும், ஜனவரி மாதம் அறிவிக்கவேண்டிய கரும்புக்கான பரிந்துரைகளை மாநில அரசு இதுவரை அறிவிக்காமல் இருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவு பாக்கியில்லாமல் பணம் கொடுக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடுகிற வேலையை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது என்று குற்றம் சாட்டினார்.

மோடி வழியில் எடப்பாடி
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதுபோல தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து மூடும் வேலையை செய்துவருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும், 8வழிச்சாலைக்கு விவசாயிகள் ஆதரவு தரவில்லை. ஆனால் மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளிடமிருந்து அடாவடியாக நிலத்தை கையகப்படுத்தி வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும், விவசாயநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது, கேபிள் மூலமாக சாலையோரங்களில் மட்டுமே கம்பிவடங்களை கொண்டுசெல்லவேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

டி.ரவீந்திரன்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் பேசுகையில், கரும்பு ஒருடன்னுக்கு ரூ. 5ஆயிரம் வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி விவசாயிகள் பலன்பெறுவார்கள், தமிழகத்தில் 8லட்சம் கரும்பு விவசாயி குடும்பங்கள் பயன்பெறும், கரும்புக்கு விலையை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கியுள்ள மாநில அரசு அச்சட்டத்தை ரத்து செய்திடவேண்டும். 2020-21 பருவ கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக (எஸ்ஏபி) டன்னுக்கு ரூ.500 அறிவித்து வழங்கிடவேண்டும் ஆனால் 3 ஆண்டுகளாக பரிந்துரை விலையை ரத்து செய்து விட்டது. மத்திய பாஜக அரசின் அறிவுரையை ஏற்று வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக்கியுள்ளது. இது கரும்பு விவசாயிகளுக்கு எதிரானது, ஆலை முதலாளிகளுக்கு ஆதரவானதாகும். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கூட பரிந்துரை விலை ரத்து செய்யப்படவில்லை.

சர்க்கரை உற்பத்தி குறைந்தது ஏன்?
2011ல் தமிழகத்தில் 24லட்சம் டன்சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கரும்புக்கு உரிய விலை உரிய காலத்தில் கிடைக்காததால் தற்போது 9 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சிக்கு மாநில எடப்பாடி பழனிசாமி அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை 24 தனியார் கரும்புசர்க்கரை ஆலை முதலாளிகள் ரூ.1217 கோடியை (எஸ்ஏபி நிலுவைத்தொகை) தரமறுக்கின்றனர். நீதிமன்றம் சென்றும் மாநில அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை மாநில அரசே ஏற்றுநடத்திட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கரும்பு பணபாக்கியை மாநில அரசு வழங்கவேண்டும் என்றார்.

;