tamilnadu

img

முடங்கிக் கிடக்கும் லுங்கி-தீப்பெட்டிக் கூடங்கள்.....

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொடூரத் தாக்குதலை தொடுத்து வரும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள், முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றிருக்கும் திமுக அரசு, மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக இந்த மாதமே 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. 

விவசாயத்துக்கு அடுத்ததாக வேலை வாய்ப்பு அளிக்கும் தொழில் என்றால் அது கைத்தறி நெசவுத் தொழில் தான். குடிசைத் தொழிலாக தங்கள் இல்லங் களில் இருந்தே செய்து வருகின்றனர். இத்தகைய தொழிலாளர்கள் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைத்தறி லுங்கி உற்பத்தி நடந்தாலும் குடியாத்தத்திற்கு என்றுமே ‘தனி மவுசு தான்’. இங்கு நெய்யப்படும் லுங்கிகள் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதியாகிறது.

வேதனையிலும் வேதனை!
குடியாத்தம் பகுதிகளில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் தனியார் துறைமூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.கைத்தறித் தொழிலின் மூலப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் கைத்தறி மற்றும்விசைத்தறி நெசவுத் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து தொழில் முழுமையாக நலிவடைந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள், சேலைகள்,வேட்டிகள், கைக்குட்டைகள் அப்படியே தேக்கமடைந்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதேபோல் மூலப் பொருட்களான நூல், பாவுஆகியன போக்குவரத்துத் தடையால் கொள்முதல் செய்ய முடியாமல் லுங்கி உற்பத்தி மட்டுமின்றி, கைத்தறிச் சேலை, புடவை, இலவச வேட்டி - சேலை,பள்ளி மாணவர்களின் இலவச சீருடை என அனைத் தின் உற்பத்தியும் முடங்கிப் போனது. தினக்கூலியை நம்பியிருந்த குறு, சிறு நெசவாளர்கள், குடும்பத்துடன் பட்டினியால் வாடினர்.

அழிந்துவரும் அடையாளம்!
சின்னதாக ஒரு பெட்டி. அதனுள் குச்சி. இதை எளிதாக தயாரிக்கலாம். வேலையும் சுலபம் தான் என்று பலரும் நினைப்பார்கள் ஆனால், உண்மை நிலையோ அப்படியல்ல. ஒரு தீக்குச்சியை தயாரிக்க பல மணி நேரம் ஆகிறது. கடினமான தொழில். பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.‘குட்டி சிவகாசி’ என்று அழைக்கப்படும் குடியாத்தம்நகரத்தின் மற்றொரு அடையாளமே தீப்பெட்டி தொழில். இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கும் முற்றிலும் தீப்பெட்டித் தொழிலையும் முடக்கி விட்டது. முந்தைய அதிமுக அரசு தீப்பெட்டி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்களை பாதுகாக்க தவறியது.இந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு எழுந்து தொழிலை துவக்கி உற்பத்தி செய்து ஏற்றுமதி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இத்தகைய சூழ்நிலையில், நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரமாக தாக்கி வருவதால், பல கோடி மதிப்பிலான தீப்பெட்டிகளும், லுங்கி, புடவை, துண்டுகள் அனைத்தும் ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. துறைமுகங்கள் மூலமாகவும் சரக்கு ரயில்கள் மூலமாகவும் வெளிநாடுகளுக்கும் விமானங்களுக்கும் அனுப்பவேண்டிய அனைத்து பண்டல்களும் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

நிலைகுலைந்த வாழ்வாதாரம்
வேலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சிஐடியு சங்க தலைவர்கள் ஜோதிபாசு, வி.காத்தவராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் வட்டாரச் செயலாளரும் தீப்பெட்டித் தொழிலாளர் சங்க நிர்வாகியுமான கே.சாமிநாதன் ஆகியோர் கூறுகையில், குடியாத்தம் பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி லுங்கி உற்பத்தி நெசவாளர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு கைத்தறிநெசவாளர்களும் வசிக்கின்றனர்.பாவடி உள்ளிட்ட உபத் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர் ஒட்டுமொத்தமாக இந்த தொழிலை மட்டும் நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.விசைத்தறி வரவு, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கைத்தறி நெசவு, லுங்கி உற்பத்தியாளர்கள் கொரோனா ஊரடங்கால் ஏறத்தாழ பத்து மாதகாலம் தொழில் இல்லாமல் முடங்கிக் கிடந்ததால் தினசரி வருமானம் கிடைக்கவில்லை. இவர்கள் மட்டுமல்ல, தீப்பெட்டி உற்பத்தியில்ஈடுபட்டு வரும் தொழிலாளர்களும் இதே நிலையை எதிர் கொண்டதால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் நிலைகுலைந்து போனது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் தங்களின் ‘கட கட’ சத்தத்தை நிறுத்திக் கொண்டன. பல கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தியான லுங்கி, புடவை, தீப்பெட்டிகளும் தேக்கம் அடைந்ததால் உரிமையாளர்களும் இந்த காலகட்டத்தில் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். இத்தகைய சூழ்நிலையில் தற்போது மீண்டும் தொழில் முடங்கியுள்ளது.

பட்டினியைப் போக்க...
நல வாரியத்தில் முறைப்படி பதிவு செய்து அல்லது புதுப்பித்து வந்தால் மட்டுமே அதிமுக அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது. மீதி உள்ளவர்களுக்கு இந்த தொகை கிடைக்கவில்லை. புதுப்பிக்கவும் பதிவு செய்யவும் வாணியம்பாடி செல்ல வேண்டி உள்ளது. எனவே இதில் மாற்றத்தை கொண்டு வந்து இணையவழியில் பதிவை மேற்கொள்ள வேண்டும்.கூட்டுறவு மற்றும் தனியார் துறை நெசவாளர்களின் மட்டுமின்றி தறிக் கொட்டகைகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வரும் அனைத்து நெசவாளர்களுக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கி பட்டினியைப் போக்க வேண்டும்.புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் திமுக அரசு, உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்வதுடன் நோய் தொற்றிலிருந்து முழுமையாக மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்கள், பட்டு நெசவாளர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு

;