tamilnadu

பழனிச்சாமி மரணம்: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

சென்னை, மே 16-லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இம் மாதம் 3 ஆம் தேதி கோவைமாவட்டம் காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பி, சிபிசிஐடி விசாரணை கோரி, பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் வியாழனன்று(மே16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.ஏற்கெனவே, நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து கோவைமாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். விசாரணை அமைப்பின் விசாரணையில் நிலுவையில் உள்ளபோது தான் பழனிச்சாமி மரணமடைந்துள்ளார் என்றும், மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.அதேசமயம், தற்போதைய விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை குறித்து தாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், பழனிச்சாமி மரணம்தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டனர். மாஜிஸ்திரேட் யார் என்பதை, இரண்டு வேலை நாட்களுக்குள் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நியமிக்க வேண்டும் என்றும், சம்பவம்நடைபெற்ற இடம் மற்றும் மறு பிரேத பரிசோதனை குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.மறு பிரேத பரிசோதனை தொடர்பாக பழனிச்சாமி குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டையே அணுக வேண்டும் என்றும், பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதிவழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாஜிஸ்திரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

;