tamilnadu

img

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு.... ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாணவர் சங்கத்தினர் போராட்டம்....

சென்னை:
அறிவியல் ஆய்வகங்களை உருவாக்கவும், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் அகஸ்தியா தொண்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த அனுமதி இருப்பதாகவும்  புதிய கல்விக் கொள்கையை இதுபோன்று அமல்படுத்தும்  முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆகஸ்ட் 25 புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று பரவலால்  கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது.மாணவர்களின் இடைநிற்றலை தடுத்திட அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளையும் கல்லூரிகளையும் முழுமையாக சுழற்சிமுறையில் உடனே திறக்க வேண்டும். வெளியூர் மாணவர்கள் தங்கிப் பயில விடுதிகளையும் திறக்கவேண்டும். தொற்று ஏற்படாமல் இருக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.  அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுமதியும்,தொண்டு நிறுவனத்தின் மூலம் இணைய வழியில் கல்வி கற்பிக்க அனுமதி அளிப்பதை  ஏற்க முடியாது. இது தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தவே உதவும், ஆகவே தமிழக அரசு உடனடியாக இவ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ,திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. 

சென்னையில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர்  காவியா,மத்திய சென்னை மாவட்ட செயலாளர் விக்னேஷ், தலைவர் மிருதுளா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாரதி, தலைவர் ஆனந்த், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வசந்த், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சேலத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் சந்தோஷ், தலைவர் பவித்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜீவா, தர்மபுரி அருள் ஆகியோர் பங்கேற்றனர். கோயம்புத்தூரில் மாநில துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இதில்  கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், தலைவர் அசாருதீன், திருப்பூர் மாவட்ட தலைவர் பிரவீன், ஈரோடு மாவட்ட செயலாளர் நவீன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். மதுரையில் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வேல் தேவா, தலைவர் பாலா, புறநகர் மாவட்டச் செயலாளர் பிருந்தா, தலைவர் ராகுல், விருதுநகர் மாவட்ட செயலாளர் சமயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலியில் மாநில துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் சத்யா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாய்சன், நெல்லை சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சியில் மாநில துணைச் செயலாளர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மோகன், தலைவர் துளசி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மணிபாரதி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், தலைவர் அர்ஜுன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;