tamilnadu

img

கேப்டன் லட்சுமி நினைவு நாளில்...

இரண்டாம் உலகப்போரின் போது 1943இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  இந்திய தேசிய ராணுவத்தை  உருவாக்கினார். அதில் ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற பெண்கள்  படைப்பிரிவு முக்கியத்துவம் வாய்ந்தது.  மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவில் வாழும் பலரும் பங்கு பெற்ற இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் லட்சுமி செகால் என்று பரவலாக அறியப்பட்ட கேப்டன் லட்சுமி இருந்தார். இதன்மூலம் பெண்கள் இராணுவத்தில் சரி சமமாக பங்கு பெறுவதற்கு நேதாஜி 70 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டியிருந்தார்.

சென்னையில் 1914ஆம் ஆண்டு பிரபல வழக்கறிஞர் எஸ்.சுவாமிநாதனுக்கு மகனாக பிறந்தவர் லட்சுமி. 1938ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம்பெற்றார். 1940 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்று அங்கு மருத்துவராகப் பணியாற்றிய பின் 1943 இல் இந்தியா திரும்பி இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். 1947இல் கான்பூரைச்சேர்ந்த கர்னல் பிரேம்குமார் செகாலை திருமணம் புரிந்தார்.இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் போன்ற  லட்சியங்கள் லட்சுமி மனதில் இடம்பெற்றன. அவர் ஒன்பதாம் வகுப்பு பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவு சரளமாக இருந்ததன் காரணமாக ஆங்கில மிஷனரி பள்ளியில் சேர்ந்தார். பின்னர்  லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்  தொடர்ந்தார். 1930 ஆம் ஆண்டு இடைநிலை கல்வியை ராணிமேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார்.

 1930 ஆம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார். அச்சமயத்தில் கம்யூனிஸ்ட்டுகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். மார்க்சிய தத்துவம் புரட்சி பற்றியும் பல நூல்களை வாங்கிப் படித்தார் லட்சுமி. சமுதாய மாற்றம் புரட்சியினால் தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம்பெற்றது. அத்தகைய புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பினார். 
கல்லூரி நாட்கள் தொடங்கி தனது இறுதி மூச்சு வரை அரசியல், மருத்துவம், போராட்டம் என சமூகப் பணியாற்றி மனித குலத்திற்கான சேவைகளுக்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மகத்தான அன்னையை, இன்றைய கொரோனா நெருக்கடிக் காலத்தில் நினைத்துப் பார்க்கிறோம். 

இன்றைய ஆட்சியாளர்கள் எளிய மக்களுக்கான மருத்துவத்தைப் பற்றி எந்த கவலையும் படுவதில்லை. மருத்துவர்களை சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்கு பதிலாக கை தட்டினால் போதும், விளக்கேற்றினால் போதும், பொய்யாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள்.தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாகவே உள்ளது. பல நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நோய் தொற்றும் பரவிக் கொண்டே வருகிறது.மக்கள் தொகை 500 பேர் கொண்ட பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க ஒரு அங்கன்வாடி மையம் இருக்க வேண்டும்; ஒவ்வொரு 1000 பேர் கொண்ட மக்கள் தொகைக்கு ஒரு ‘ஆஷா’ பணியாளர் எனப்படும் சுகாதாரஆர்வலர் இருக்க வேண்டும்; 5000 பேர் கொண்ட மக்கள் தொகைக்கு சுகாதார நிலையங்கள், தகுதிவாய்ந்த செவிலியர்கள், மருத்துவர்கள் இருக்க வேண்டும்; 35 முதல் 50 ஆயிரம்மக்கள் தொகை உள்ள இடங்களில் ஆரம்ப சுகாதாரநிலையங் களும் அதற்கு அடுத்த நிலையில் வட்டார, மாவட்ட அளவிலான தலைமை அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்; இதுதான் ஒரு மாநிலத்தின் பொதுசுகாதார கட்டமைப்பின் வலுவான படி நிலைகள் என்று வழிகாட்டுதல்கள் உள்ளன.

 2015 ஆம் ஆண்டு தரவுகளின் படி தமிழகத்தில்1 750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மிகச் சிறந்த கட்டமைப்பு கொண்ட தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல கிராமங்களில் பணியாளர்கள் இல்லாத நிலையும் துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் இல்லாத நிலையும் அரசு தலைமை மருத்துவமனை களில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலையும் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பியே நம் கிராமங்களின் ஆரோக்கியம் இருக்கிறது. ஆனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களும் துணை சுகாதார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மக்கள் துயரின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த நிலைக்கு உடனே தீர்வுகாண வலியுறுத்தியும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் கேப்டன் லட்சுமி நினைவு நாளில் மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் இயக்கம் நடைபெறுகிறது.

===ஜி.ராணி, மாதர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர்===

;