tamilnadu

img

நீட்: மதிப்பெண் வாழ்க்கையை முடிவு செய்யாது -  சூர்யா

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குக் கடந்த வாரம் அல்லது கடந்த மாதம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போது இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். நிச்சயமாகக் குறைந்திருக்கும், அல்லது தீர்ந்திருக்கும். 

ஒரு தேர்வு உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்கள் மனதுக்குக் கடினமாக இருந்தால் உங்களுக்குப் பிடித்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என யாரிடமானவது மனம் விட்டுப் பேசிவிடுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்து விடக்கூடியவை. தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை.   

நான் நிறையத் தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறேன்.  குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளது. உங்களைப் புரிந்து கொள்ளவும் நேசிக்கவும் நிறையப் பேர் இருக்கிறோம். நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயிக்கலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கூறி உள்ளார்.

;