சென்னை, நவ.26- கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டு தோறும் டிச.4 ஆம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற பிரம்மாண்ட போர்க் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அலுவலகம் சார்பில், இக்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் கப்பலை பார்வையிட்டனர். கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் கடல் எல்லைப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் பாதுகாப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கப்பலின் வருகை அமைந்துள்ளது. பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.