சென்னை:
ஊரடங்கின்போது நிகழ்வுகள் 50 விழுக்காடு குறைவாக அறியப்பட்டிருந்தாலும், கோவிட் அச்சத்தின் காரணமாக சிகிச்சை பெறுவதை நோயாளிகள் தாமதிப்பதால், உயிரிழப்பு விகிதம் உயர்ந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இருதயவியல் சிகிச்சை நிபுணர்கள் இத்தகவலை தெரிவித்திருக்கின்றனர். கோவிட் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதில் ஏற்படுகின்ற தாமதத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர மாரடைப்பு நோயாளிகள் மத்தியில் இறப்புவிகிதமும் அதிகரித்திருப்பது அறியப் பட்டுள்ளது. இதனை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். கணேசன் தெரிவித்துள்ளார்.
இக்காலகட்டத்தில் சிகிச்சைக்காக வரும் தீவிர மாரடைப்பு நோயாளிகளின் எண் ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதை நாங் கள் காண்கிறோம். எங்களது மருத்துவமனையில் இந்த கோவிட்-19 மற்றும் ஊரடங்கு அமலில் இருந்த 3 மாத காலஅளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 355. 2019 ஆம் ஆண்டில் இதே காலஅளவின்போது மாரடைப்புக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 820. எங்களது இந்த புள்ளிவிவரத் தகவலானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட இருதயவியல் சார்ந்த கணக்கெடுப்புகளோடு ஒத்துப்போகிறது. இந்த இரு பிராந்தியங்களிலும் அவர்களது நாடுகளில் தீவிர மாரடைப்பு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் 50-60விழுக்காடு குறைந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது என்று கூறினார்.