tamilnadu

img

மார்ட்டின் உதவியாளர் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை:

மர்மமான முறையில் இறந்து போன லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி உடலில் உள்ள ரத்த காயங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராகப் பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிண மாகக் கண்டெடுக்கப்பட்டார்.


இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் இது கொலை எனவும் கூறி,இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 7ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை புதனன்று (மே 15) நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும்போதே ஏற்பட்டதா அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா என சந்தேகம் எழுப்பினர். தற்போது பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மேலும், தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக வியாழனன்று (மே 16) முழு மையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

;