வாகன விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி
மாமல்லபுரம், ஜூலை 2- கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவல் பணி, துப்புரவு வேலையில் கல்குளம், அணைக்கட்டு, பழைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று (ஜூலை 2) காலை பணி முடிந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேனில் கல்குளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கடலூரில் இருந்து ‘ஸ்பிரிட்’ ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்து கல்குளம், புதுக்காலனியைச் சேர்ந்த பாலாஜி (28), அய்யனாரப்பன் (30) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த முருகன், நந்தினி, சரத்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கூவத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நகை திருடியவர் கைது
சென்னை, ஜூலை 2- சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் தி.ராதா டால்மியா (60). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராதா பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராதாவுக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக ஒரு பெண் வந்தார். அந்த பெண் சிகிச்சை அளித்துவிட்டு, சென்ற பின்னர், ராதா வீட்டில் கழற்றி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க,வைர நகைகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைத் திருட்டில் ஈடுபட்டது ராதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த அமைந்தகரை ஆட்சியர் காலனி பகுதியைச் சேர்ந்த ச.சௌமியா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தலைமறைவாக இருந்த சௌமியாவை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ராதா வீட்டில் திருடப்பட்ட ரூ.7 லட்சம் தங்க,வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை
காவல்துறையின் ‘லத்தி வீச்சுக்கு’ பலியானவரின் மனைவி
மதுரை ஆட்சியரிடம் மனு
மதுரை, ஜூலை 2- காவல்துறையின் ‘லத்தி வீச்சுக்கு’ பலியான மதுரை எஸ்.ஆலங்குளம் முடக்கத்தானைச் சேர்ந்த விவேகானந்த குமாரின் மனைவி கஜப்பிரியா மதுரை ஆட்சியர் த.சு.ராஜ சேகரிடம் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென மனு அளித்துள்ளார். விவேகானந்தகுமார்கடந்த ஜூன் 15-ஆம் தேதி காவல்துறையின் ‘லத்தி வீச்சுக்கு’ பலியானார். காவல்துறை நிகழ்த்திய தாக்குதலால், லத்தியால் மார்பில் ஓங்கி அடித்த தால் எனது கணவர் இறந்துவிட்டார் என மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் காவல்துறை தாக்கிய தமது கணவர் இறந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது கணவரின் கொலைக்குக் காரணமான டெல்டா படை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரத்தினவேலு மற்றும் காவ லர்கள் கிருஷ்ணமூர்த்தி. இரமேஷ்பாபு, கந்தசாமி, பிரபு சீலன், மணிகண்டன் ஆகியோர் மீது 304(II)-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கணவரை காவல்துறையினர் தாக்கியதற்கான சிசிடிவி பதிவுகளை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எனது எதிர்கால வாழ்க்கை, குழந்தை வளர்ப்பை கருத்தில்கொண்டு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கின் விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு
பேரா.நிர்மலாதேவி விவகாரம்
மதுரை, ஜூலை 2- மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மீது தொடரப் பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை ஜூலை 8- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் பி.சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” அருப்புக்கோட்டை தனி யார் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு திங்களன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரினர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.