tamilnadu

img

சென்னையில் உள்ள அனைத்து நூலகங்களிலும் , ஆடியோ நூலகம் பிரிவு தொடக்கம்

அசோக் நகர் வட்டார நூலகத்தைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் 'ஆடியோ நூலக பிரிவு' தொடங்கப்படும் என சென்னை மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமார் கூறினார்.

சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவில் ஒரு புதிய முயற்சியாக அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஆடியோ நூலக பிரிவு தொடக்கவிழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது . இந்த பிரிவில் கதைசொல்லி ரம்யாவாசுதேவன் குரலில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 750 கதைகள் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது .இதை வாசகர்கள் ஒலி வடிவில் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த கதைகளை வாசகர்கள் வாட்சப் க்யூ-ஆர் குறியீடு மூலமாகவும் கேட்டுப் பயனடையலாம் . 

பாரதியார் , அசோகமித்திரன் , கி.ராஜநாராயணன் , சுஜாதா , பாலகுமாரன் , ஜெயகாந்தன் , பிரபஞ்சன் , எஸ்.ராமகிருஷ்ணன் , இந்திரா பார்த்தசாரதி , தி. ஜானகி ராமன் , லா.ச.ரா எனப் பிரபல எழுத்தாளர்களின் கதைகள் தேர்வு செய்யப்பட்டு , அவற்றின் சுருக்கம் ஒலி  வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட பக்கங்களில் உள்ள கதைகளை 15 முதல் 18 நிமிஷங்கள் கேட்க முடியும் . 

இதுகுறித்து பேசிய மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமார் , வாசகர்களின் வருகையை அதிகரிப்பதற்கான முயற்சியாய் இந்த ஆடியோ நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது எனவும் , இத்திட்டம் சென்னையில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறியுள்ளார் . 

 

;