tamilnadu

லாரி மோதி துப்புரவு பணியாளர் பலி 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை, ஜூன் 4-சென்னை புறநகர் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதிநகராட்சி துப்புரவு தொழிலாளி பலியானார்.சென்னை புறநகர்  பல்லவபுரம் நகராட்சியில்  துப்புரவு பணிகள் எஸ்.டபிள்யூ.எம்.எஸ்  என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையை சுத்தம் செய்வதுவழக்கம். கடந்த திங்களன்று நள்ளிரவில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் அருகே ஆர் முருகன் (36) எம்.கலைவாணி (32)  ஜெ. கதிரேசன் (24) ஆகியோர் சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தாம்பரத்தில் இருந்த சென்னை நோக்கிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி தாறுமாறாக  ஓடி (வண்டி டிஎன்20ஏஏ 6116) இவர்கள் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே முருகன் இறந்து விட்டார். மனைவி கலைவாணியும் அவரது  உறவினர் கதிரேசனும் பலத்த காயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கோரிக்கை 
உயிரிழந்த தொழிலாளி முருகன் குடும்பத்திற்கு ரூ. 10லட்சம் நட்ட ஈடு தரவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்பநிரந்தர பணி தரவேண்டும்,காயமடைந்த கலைவாணி, கதிரேசன் ஆகியோரது மருத்துவ செலவை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளவேண்டும், சிகிச்சை முடிந்து பணிக்கு வரும் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும். இரவு நேர துப்புரவு பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது, ஏற்கனவே தாம்பரம் நகராட்சியில் இரவுநேரத்தில் சாலையை துப்புரவு செய்தபோது இரண்டு பெண் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் வரை பணிபுறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழிய சங்கம் (சிஐடியு) நிர்வாகிகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.நட்ட ஈடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க உறுதி அளிக்காத வரை முருகன் உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

;