tamilnadu

img

சட்டமன்றக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கை ஆய்வு செய்த பேரவைத்தலைவர்

சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல  துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பலர் இயங்க வேண்டும். கோப்புகளை எடுத்து வரவேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும். இதுபோன்ற பல பிரச்சனைகள் உள்ளன.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்து பேரவைத் தலைவர் தனபால்  சென்று ஆய்வு நடத்தினார். துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், பேரவை செயலாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பேரவைத் தலைவர் தனபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டப்பேரவை கூடுவதற்கு தகுந்த இடம் வேண்டுமென்று கலைவாணர் அரங்கத்தில் இந்த இடத்தைப் பார்த்துள்ளேன். முடிவு செய்து பின்னர் அறிவிப்போம். கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதுபற்றி பின்னர் அறிவிப்போம்” என்றார்.

கொரோனா அச்சுறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டமன்றக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பதால்  கூட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

;