tamilnadu

தற்போதைய நிதிநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க சாத்தியம் இல்லை: அமைச்சர்....

சென்னை:
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெட்ரோல்- டீசல் விலையை குறைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏப்ரல் 2011-ல் ரூ.9.48 பைசாவாக இருந்த பெட்ரோல் வரி, 2014-ல் பாஜக அரசு பதவி ஏற்றதும் ரூ.21.48 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 4 ரூபாயை மட்டும் மாநிலத்துக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள பைசாவை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது.ஒரு லிட்டர் பெட்ரோலில் கிடைக் கும் வரியில் 5 மடங்கும் டீசலில் 15 மடங்கும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. மாநில அரசுகளுக்கு மிக மிக சொற்ப அளவில் 4 விழுக் காடு மட்டுமே கொடுக்கிறது. மீதமுள்ள 96 விழுக்காட்டை ஒன்றிய பாஜக அரசு எடுத்துக்கொள்கிறது.செஸ் வரி என்பதே தவறான கொள்கை. இந்த வரி விதிப்பு சட்டவிரோதம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ஆர். ரங்கராஜன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஒன்றிய அரசு வசூலித்த பணத்தில் இதுவரை ஒரு வருடம் கூட செஸ் வரியை கூறப்பட்ட திட்டத் திற்காக முழுமையாக ஒன்றியஅரசு பயன் படுத்தவில்லை. கல்விமற்றும் கிராமப்புற கழிப்பறைதிட்டங்களுக்கு செலவிட வேண்டும்.ஆனால் ஒரு ரூபாய் கூட, அதுபோன்று செலவு செய்யாமல் மாநிலஅரசுகளை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் மறைமுகமாக எடுத்துக் கொண்டுள்ளது.நமது மாநிலத்திற்கு ஒன்றிய பாஜக அரசு 50 ஆயிரம் கோடியை வழங்காமல் இருப்பதும், அதிமுக அரசு வாங்கிய கடனுக்கு வட்டிச் சுமை கூடுதலாக இருப்பதும் நாங் கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தெரியவந்துள்ளது. இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.தற்போதுள்ள நிதிநிலையில் இப்போதைக்கு பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. நிதிநிலை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக உள்ளது. நிதி நிலை சீரான பின் நிச்சயமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு 
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந் திரன், “நீட் தேர்வு குறித்து சில கேள்விகளை எழுப்பினார்.அப்போது குறுக்கிட்ட பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் கட்சியான திமுகவின் நிலைப்பாடு, அதிமுகவின் உணர்வும் அதுதான். அவர்களும் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். செயற்குழுவிலும் தீர்மானம் போட்டுள்ளார்கள். மேலும், சட்டமன்றத்திலும் ஆளும் கட்சியாக இருந்தபோது தீர்மானம் போட்டுள்ளார்கள்” என்றார்.நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு கேட்கும்போது நீங்கள் (பாஜக) குரல் கொடுக்க தயாரா? என்றும் வினவினார்.இதற்கு விளக்கம் கொடுத்த நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு அது நடக்கும் என்றால் நிச்சயம் நாங் கள் ஆதரவு கொடுப்போம் என்றார்.எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடக்குமா? நடக் காதா? என்றார்.இதற்கும் பதில் அளித்த முதலமைச்சர்,“ 2010 ஆம் ஆண்டில் விருப் பம் உள்ள மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று இருந் தது. ஆனால், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக் கப்பட்டுவிட்டது.திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்றோம். அதில் உறுதியாக இருக்கிறோம். நீதிபதி ராஜன்குழு அளிக்கும் பரிந்துரையை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நமது மாநிலத்திற்கு மட்டும் விலக்கு தரவேண்டும் என்று பிரதமரையும் சந்தித்து முறையிட்டுள்ளேன். தொடர்ந்து போராடுவோம், வெற்றிபெறுவோம், அதற்கு அதிமுகவும் துணை நிற்கவேண்டும்” என்றார்.தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,“நீட் தேர்வில் தமிழ் நாட்டிற்கு விலக்கு பெற அரசுக்கு அதிமுக துணை நிற்கும்” என்றார்.

வன்னியருக்கு 10.5 இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப் பட்ட 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை அமலாக்கம் செய்வது குறித்தும் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார்.இதற்கும் பதில் அளித்த முதலமைச்சர்,“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 2021 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தைசெயல்படுத்துவது குறித்தும் அரசாணைகள் பிறப்பிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை நடத்தி நிச்சயம் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

;