tamilnadu

img

ஒரு தேர்வுக்கு பல முறை கட்டணம் வசூலிப்பதா? அரசுக்கு எஸ்எப்ஐ எதிர்ப்பு - தேர்வு பிரச்சனையில் தெளிவான முடிவெடுக்க வலியுறுத்தல்....

சென்னை:
ஒரு தேர்வுக்கு மாணவர்களிடம் பல முறை கட்டணம் வசூலிக்கும் அரசின் நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ)  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்வு பிரச்சனையில் அரசு தெளிவான முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர்  வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தேர்வுகட்டணம் என்ற பெயரில் ஒரு தேர்வுக்கு பல முறை மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை அரசு கைவிடவேண்டும்.கொரோனா பெருந்தொற்று காலங்களில் மாணவர்கள் கல்வி வளாகங்களிலிருந்து பயில முடியாத நிலையில் வீடுகளிலிருந்தே கல்வி கற்கும் சூழல் உருவாகி உள்ளது. பள்ளிக்கல்வியை பொறுத்தவரையில், பள்ளிக்கல்விதுறை செயலாளர் ஒரு அறிவிப்பு வெளியிடுவதும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அந்த அறிவிப்பை மறுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றொரு அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது.  

தேர்வு குறித்து தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி, நீதிமன்றம் என பல மாறுபட்ட அறிவிப்பால் மாணவர்கள் தங்களின் தேர்வு குறித்து மிகப்பெரும் குழப்பத்திலேயே உள்ளனர். குறிப்பாக இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்கள் தேர்ச்சி குறித்து கடும் அச்சத்தில் உள்ளனர். முதுகலை முடித்த, முடிக்கவுள்ள மாணவர்களும் இதே குழப்பத்தில் உள்ளனர். இதனால் இவர்களின் வேலைவாய்ப்பும், உயர்கல்வியில் தொடர்வதும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதேபோல் தற்போது, கடந்த மார்ச் மாதம் பல்கலைக்கழகங்களின் அறிவுறுத்தல்படி தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது. பின் யு.ஜி.சி யின் நிலைபாட்டால் மாணவர்கள் தேர்வு எழுதும் சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய தொகை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் எனவே கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை உயர்த்துவதற்காக சிறப்பு தேர்வு எனக்கூறி இரண்டாம் முறை மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தையும் வசூல் செய்துள்ளனர். வெகுசில மாணவர்கள் மட்டுமே இரண்டாம் முறை கட்டணம் செலுத்தி தேர்வு எழுதினர். தேர்வு எழுதாத மாணவர்களின் தேர்ச்சி கேள்விக்குள்ளாகியது. இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி மூன்றாவது முறையாக மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை செலுத்த பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த வருடம் ஏப்ரல் - மே மாதம் எழுதக்கூடிய பருவத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியும் இன்னமும் சரியான அறிவிப்பு இல்லாமல் மாணவர்கள் அந்த தேர்வில் தேர்ச்சி குறித்த குழப்பத்துடன் இருக்க, மறுமுறை அதே தேர்வுகளுக்கு பணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.தமிழக முதல்வர் அறிவித்தபடி அனைத்து மாணவர்களின் தேர்ச்சியையும் உத்தரவாதம் செய்ய வேண்டும். இல்லையெனில், மாணவர்கள் முதல்முறை செலுத்திய தேர்வு கட்டணத்திலிருந்து அவர்கள் மறுபடியும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

மேலும் இணைய வழியில் தேர்வு நடப்பதால் தேர்வுக்கான வினாத்தாள்களை இணையத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்து எழுத வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும் போதே விடைத்தாளுக்கான தொகையையும் சேர்த்து செலுத்துவதால் மாணவர்களிடம் அவர்களின் விடைத்தாள்களை அவர்களின் கல்லூரி வழியாக கொடுக்க வழிசெய்ய வேண்டும்.இணையவழியில் தேர்வு நடைபெறுவதால் கிராமப்புற மாணவர்கள் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்வதிலும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதிலும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் பல மாணவர்களுக்கு WWW-Withheld என தேர்வு முடிவுகளில் வருவதால் குறிப்பிட்ட அந்த தாள்களுக்கு மாணவர்கள் மறு மதிப்பீட்டிற்கு 250 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 

எனவே மாணவர்களின் இந்த பிரச்சனைகளையும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு தமிழக அரசும், பல்கலைக்கழகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயர்கல்வி கற்க தடையின்றி உடனே இத்தேர்வு குறித்த பிரச்சனையில் அரசு சரியான தெளிவான  முடிவெடுக்க வேண்டும். மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;