tamilnadu

காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.... ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை....

சென்னை:
அரசு ஊழியர் மருத்துவக் காப் பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2008 ஆம் ஆண்டு அப் போதைய முதலமைச்சர் கலைஞரால் துவங்கப்பட்டு ஒரு ஊழியருக்கு ரூ.20 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்தும், தமிழக அரசு சார்பில் சேவைவரி 12.5 விழுக்காடு பங்களிப்பு செய்தும் 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சத் திற்கான மருத்துவ காப்பீட்டு வழங்கப்பட்டது.தற்போது அரசாணை எண்.160 நாள்.29.6.2021-ன் படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  2021ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஊழியருக்கு ரூ.300, (295+5=300) வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கடந்த அதிமுக ஆட்சியின் நடைமுறைப்படியே ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பிரீமியத் தொகையிலிருந்தே ரூ.5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் எனவும் உச்சவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் அரியவகை நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பாக அதிக செலவுகளை சந்திப்பதற்காக கார்பஸ் நிதியை உருவாக்க ரூ.300 பிரீமியத் தொகையிலிருந்து ரூ.5 பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள் ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்காக எவ்வித தொகையையும் பங்களிப்புச் செய்யவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும், அரசு ஊழியர் மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள் ளது.முந்தைய திமுக ஆட்சியில் விருப்பக் கடிதம் கேட்கப்பட்டதைப் போன்று தற்போதைய திட்டத்திலும் விருப்பக்கடிதம் கேட்க வேண்டும். பிரீமியம் தொகையில் 60 விழுக்காடு உயர்த்தப்பட்டது போன்று மருத்துவக்காப்பீடு ரூ. 7 லட்சமாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ. 15 லட்சமாகவும் உயர்த்த வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போது ரத்தக் கொடை கொடுப்பவருக்கு ஆகும் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ செலவுகளை மருத்துவக் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும். குடும்பம் என்பதில் கணவன், மனைவி, குழந்தைகள் (வயது 25 என்பதை ரத்து செய்து திருமணம் வரை), பெற்றோர்கள், வளர்ப்பு மற்றும் தத்து குழந்தைகள், விதவை, விவாகரத்துப் பெற்ற ஆண், பெண் குழந்தைகள் ஆகியோரை இத்திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.மருத்துவச் சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்கி பேக்கேஜ் என்று இல்லாமல் தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கமான 100 விழுக் காடு ‘கட்டணமில்லா சிகிச்சை” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.தற்போதைய அரசாணையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 மற்றும் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000 என பேக்கேஜ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிர்ணயம் கட்டணமில்லா சிகிச்சை என்ற அரசின் நோக்கத்திற்கு முரணாக உள்ளது. தற்போது, உள் நோயாளி சிகிச்சை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வெளிநோயாளி சிகிச்சை மற்றும் ஓராண்டு கண்காணிப்பு சிகிச்சை அனுமதிக்க வேண்டும்..

காப்பீட்டுத் திட்டம் தொடர் பாக மாவட்ட, மாநில அளவில் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் குறைதீர் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். இதற்கு சங்கப் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும்.தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவக்காப்பீடு பெற இயலாத நோயாளிகள் மீள மருத்துவக்காப்பீட்டை பெற குறைதீர் அலுவலரை அணுகிப் பெற விண்ணப்பிக்கும் கால அளவை 30 நாட்களிலிருந்து 90 நாட்களாக உயர்த்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் முன்பணம் கேட்பதை தடை செய்ய வழிவகை செய்து 12 லட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் திருத்தம் செய்து புதிதாக அரசாணையை வெளியிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;