தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் கைது
விழுப்புரம், மே 10-ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பல்லவாடு பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜூனாராவ் (27), கல்லா சீனிவாசராவ் (22). இவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துறா காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்நிலையில் பாலம் அர்ஜூனாராவ், கல்லா சீனிவாசராவ் ஆகிய இருவரும் விசாகப்பட்டினத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கேரளா காவல் துறையினர் விசாகப்பட்டினத்திற்கு சென்று அர்ஜூனாராவ், கல்லா சீனிவாசராவ் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் அங்கிருந்து விசாரணைக்காக கேரளாவிற்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். ஜீப் விழுப்புரம் வழுதரெட்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் இருவரும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்காக ஜீப்பை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் ஜீப் கதவை திறந்தபோது அதிலிருந்து கீழே இறங்கிய அர்ஜூனாராவ், கல்லா சீனிவாசராவ் ஆகியோர் காவல் துறையினரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து கேரளா காவல் துறை உதவி ஆய்வாளர் கோபுகுமார், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் வயல்வெளி பகுதியில் பதுங்கி இருந்த கல்லா சீனிவாசராவை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய அர்ஜூனாராவை தேடி வருகின்றனர்.
பேருந்தில் மது பாட்டில் கடத்தல்: ஓட்டுநர்கள் கைது
விழுப்புரம், மே 10-புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திண்டிவனம் வழியாக ஆரணிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் முகிலனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ஆந்திரா மாநில அரசு பேருந்தை வழிமறித்து சோதனை செய்ததில் 394 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் பேருந்து ஓட்டுநர்களான ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா தாலுகா உத்வாராபள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (45), மாற்று ஓட்டுநரான காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த லோகநாதன் (40) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து ஆரணிக்கு பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கனிம வளங்கள் திருட்டு: கல் குவாரிகளில் ஆய்வு
நாகர்கோவில், மே 10-கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் திருட்டுத்தனமாக வெட்டி எடுக்கப்படுவதாகவும், இவை வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாகவும் புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்தன. மலைகளை உடைத்து பாறைகளையும், ஆறுகளில் உள்ள மணலையும் அனுமதியின்றி லாரிகள் மூலம்சமூக விரோதிகள் கடத்திச் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதைத்தொடர்ந்து வழக்குரைஞர் பிரபாகரன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இந்நிலையில் ஆணைய அதிகாரி பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குமரி மேற்கு மாவட்டத்தில்வெள்ளிமலை பகுதியில் உள்ள ஒரு குவாரியில் முதல்கட்ட ஆய்வு நடைபெற்றது.கல்குவாரியில் இருந்து இதுவரை எவ்வளவு கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, அவற்றின் மதிப்பு, இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.