தமிழகத்தில் நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், ஆகஸ்ட் 3(இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மி வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4(நாளை) நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மத்திய மேற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு-வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.