tamilnadu

img

மின்வாரிய தலைவரை திரும்ப பெற வேண்டும்... தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்

சென்னை:
மின்சார திருத்த மசோதாவை மாநில அரசு எதிர்க்கும் நிலையில், 2 துணை மின் நிலையங்களை குத்தகைக்கு விடுத்துள்ள வாரியத் தலைவரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது.

மின்வாரிய நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதனன்று (செப்.16) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்றது.முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச் சையான உத்தரவுகளை பிறப்பிப்பதை கைவிட வேண்டும், ஊரடங்கு காலத்தில் பணியாற்றியபோது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வாரிய தொழிலாளர்களுக்கும் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தனியார் மின்நிலையங்கள் குத்தகை மற்றும் அவுட்சோர்சிங் என்ற பெயரில் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்,

ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகள் ரத்து செய்வதை திரும்ப பெற வேண்டும், ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு அரசாணை 304ன்படி சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும், ரத்து செய்த சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும், வாரிய விதிகளுக்கு முரணாக ஊர்மாற்றம் செய்யக் கூடாது,30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பநிலை பதவிகளை நிரப்ப வேண்டும், செயலாக்கப்பிரிவில் 66 பதவிகளை ஒழிப்பதை கைவிட வேண்டும், செயலாக்க பிரிவையும், நிர்வாகப்பிரிவையும் இன்டர்சேஞ்ச் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை ஆர்ப்பாட்டத்தில் முழக்கமாக எழுப்பினர்.

அப்போது, செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப் பாளர் எஸ்.ராஜேநதிரன், “மின்சார சட்ட திருத்த மசோதாவை மாநில அரசு எதிர்க்கும் நிலையில், மின்வாரிய தலைவர் 2 துணை மின்நிலையங்களை, 2 ஆண்டுகளுக்கு 93.75 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இவ்வாறு குத்தகை விடுவதன் மூலம் ஊழியர்களின் பதவி உயர்வுகள் பாதிக்கப்படுகின்றன” என்றார்.“நிர்வாகம் தன்னிச்சையாக ஓராண்டுக்கு சரண்டர் விடுப்பை ரத்து செய்துள்ளது. முத் தரப்பு ஒப்பந்தப்படி புதிய பதவிகளை நிரப்புவதற்கு மாறாக, செயலக பிரிவில் 66 பதவிகளை ஒழித்துக்கட்டுகின்றனர். வாரியத் தலைவர் மின்வாரியத்தை பாதுகாப்பதற்கு மாறாக செயல்படுகிறார். தொழிற்சங்கத் தலைவர்களை சந்திக்க மறுக்கிறார். எனவே, வாரியத் தலைவரை திரும்ப பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

;