சென்னை, டிச. 10 - சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ ஸ்டாலின் குமார் பேசுகையில், துறையூர் தொகுதியில் பல பகுதிகளில் புயல் காரணமாக வெள்ள நீர் புகுந்து, விளை நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்பட்டன. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், உங்கள் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தான் அதிக நிதி ஒதுக்க வேண்டும். நல்ல கனிவுள்ள நிதி அமைச்சர். கருணையோடு கவனித்து, அதிக நிதி ஒதுக்குமாறு உங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது, பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் பலரும் சிரித்தனர்.
‘செல்வப்பெருந்தகை எம்எல்ஏவாக தொடர்வது என் கையில் தான் உள்ளது!’
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை, “கடந்த வாரம் பெய்த மழையால் எனது தொகுதியில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் முல்லை நகர், தனலட்சுமி நகர், பி.டி.சி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனுபவம் வாய்ந்தவர், எதை எடுத்தாலும் முழுமை யாக செய்து முடிக்கக் கூடியவர்.
அரை குறையாக செய்யாதவர் என்பதை அறிவோம். ஆனால், எனது தொகுதியில் வரதராஜபுரம் பகுதியில் அரைகுறையாக வேலை நடந்திருக்கிறது; முழுமையாக நடைபெறவில்லை. எனவே, வரும் நிதிநிலை அறிக்கையில் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவார் எனக் கருதுகிறேன்.
எனவே, நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவர் கையில் தான் இருக்கிறது. எனவே, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதை நிறைவேற்றி தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இதற்குப் பதிலளித்த துரைமுருகன், “செல்வப்பெருந்தகை என்னிடம் நன்றாக மாட்டிக் கொண்டார். அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது என் கையில் தான் இருக்கிறது” என்றதும் பேரவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.