நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக தொண்டரை அரை நிர்வானப்படுத்தி இழுத்து சென்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற தேர்தலின்போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கள்ள ஓட்டு போட்டுவிட்டு தப்பியோடியதாக ஒருவரை துரத்திப்பிடித்து அவரைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதுமட்டுமல்லாமல், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரை நிர்வாணத்துடன் திமுக பிரமுகரை அழைத்துவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.