tamilnadu

img

ஆட்சிக்காலத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாத அதிமுகவின் போராட்டம் வேடிக்கையாக உள்ளது... கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்...

சென்னை:
ஆட்சிக்காலத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாத அதிமுகவின் போராட்டம் வேடிக்கையாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.

சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது. ஆனாலும் அது இன்னமும் முற்றாக குறையவில்லை. ஒழிந்துவிட்டதாக சொல்லவும் முடியாது. கடந்த இரு தினங்களாக பரவல்எண்ணிக்கை சிறு அளவில் அதிகரித்திருக் கிறது. அரசு, தனது நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். ஒழிக்க வேண்டும். மூன்றாவது அலை வருகின்றபோது எச்சரிக்கையோடு இருந்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்துவோம் என்றார்.

பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தஅதிமுக தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றாத ஏராளமான வாக்குறுதிகள் இருக்கிறது. அவைகளை எண்ணிப்பார்ப்பதற்கு மாறாக, நீட் தேர்வை திணித்துள்ள ஒன்றிய அரசோடு கைகோர்த்துக்கொண்டு, திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிற தார்மீக உரிமை அதிமுகவுக்கு கிடையாது. தற்போது, கொரோனா பேரிடருக்கு அதிகமாக நிதி தேவைப்படு கிறது.எனவே இந்த நேரத்தில், பெட்ரோல்-டீசல் விலை குறைப்புக்கு சாத்தியமில்லை என்றாலும் கொரோனா நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று முதலமைச்சர் கூறியிருப்பதையும் கே.பாலகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார்.

“கூடங்குளத்தில் அணு பூங்கா அமைக்கக்கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்போதும் அதே நிலைபாட்டில்தான் இருக்கிறது. இரண்டு அலகுகளுக்குமேல் ஒன்று கூட உருவாக்கக்கூடாது என்பதைதொடர்ந்து வற்புறுத்துவோம். மேலும் விரிவுபடுத்தக்கூடாது என்றும் சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம்.கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நிலையற்ற தன்மையில் உள்ளதால் மேகதாது விவகாரத்தை உள் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான எந்த உரிமையும்  கிடையாது. நமது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம்” என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

;