tamilnadu

முன்னாள் அமைச்சரின் மிரட்டல் பேச்சு.... அரசு ஊழியர்கள் அச்சமின்றி பணிபுரிய நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலையில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கரைவேட்டிய கட்டிய அடிமட்ட தொண்டர்களை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களாக இருந்தாலும் மதிக்கவில்லை என்றால் எந்த அதிகாரியும் அரசு ஊழியரும் இந்த மாவட்டத்தில் வேலைபார்க்க முடியாது.இது முதலமைச்சரின் கட்டளை என கூறிய செய்தி தொலைக்காட்சியில் வெளியானபோது, அதைப்பார்த்த தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கோபமும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசு எடுக்கும் சீரிய முயற்சிகளை அனைத்துத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது உயிரை துச்சமென மதித்து செயல்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது குறித்து முதலமைச்சர் தலையிட்டு, அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமின்றி பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;