திமுக தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், முறைப்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
திமுகவில் அடிப்படை உறுப்பினர், கிளைக்கழக செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி திமுகவின் தலைவராக உயர்ந்தவர்.
அதே போல் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகராட்சி மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி தமிழக முதலமைச்சரானவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழகத்தில் மதவெறியை எதிர்த்து, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்கு தலைமையேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் பாஜகவை வீழ்த்தியவர். இன்றைக்கும் மாநில உரிமைகளை பாதுகாப்பது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மின்சார திருத்த சட்ட எதிர்ப்பு என்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைககளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கததை பாதுகாக்க முனைப்பாக செயலாற்றுவதோடு, மத்திய பாஜக அரசின் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில உரிமைகளை பறிக்க முற்படும் பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய திமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்றக்குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.