சென்னை, பிப். 25- பிரதமர் நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சிகள் பாணியில் ரயில்வே நிர்வாகம் ஆள் திரட்ட முடிவு செய்திருப்பதற்கு டிஆர்இயு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செயல் தலைவர் அ.ஜானகிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் காணொலி வாயிலாக திங்களன்று (பிப். 26) ரயில்வே திட்டங்களை துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு ஆள் திரட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு மேலிடம் ஆணை பிறப்பித்துள்ளது போல் தெரிகிறது.
அம்பத்தூர், சென்னை கடற்கரை, சென்னை பூங்காநகர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சூளுர்பேட்டை ஆகிய இடங்களில் பந்தல் போட்டு எல்இடி பெரிய திரை வைத்து பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (பிப். 26) காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒளிப்பரப்படவுள்ளது. அதற்கு ரயில்வே சூப்பர்வைசர்கள், தொழிலாளர்கள் தான் பொறுப்பு என நிர்வாகம் கூறியுள்ளது. திருத்தணி, நகரி, புத்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம், ரேணிகுண்டா வரை, சூளுர்பேட்டை, நாயுடுபேட்டை, கும்மிடிபூண்டி ரயில்வே கேட்டுகள் மேம்பாலங்களாக மாற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆளுநர் பரங்கிமலையில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எனவே பெரம்பூர் கேரேஜ், லோகோ ரயில்வே பணி மனையில் இருந்து தொழிலாளர்கள் பரங்கிமலை போகவேண்டும் என ரயில்வே அதிகாரிகள் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ரயில்வேயில் இதற்கு முன்பு இதுபோன்று நடை பெற்றதில்லை. அரசியல் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவது போல் பிரதமர் பங்கேற்கும் ரயில்வே விழாவுக்கு போகச் சொல்லி தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பது, ரயில்வேயின் மரபை மீறிய செயல் மட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகமாகும்.
இவை அனைத்தும் அரசு இயந்தி ரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உற்பத்தி பாதிப்புக்குக் காரணமாக இருத்தல், தேவையற்ற விளம்பர செயல்களால் மக்களின் வரிப் பணத்தை வீணடித்தல், வருங்கால சந்த தியினருக்குத் தவறான முன்னு தாரணமாகும். இதுவரை இப்படி ஒரு கூத்து ரயில்வேயில் நடைபெற்ற தில்லை. நிகழ்ச்சிக்கு ஊழியர்கள் சென்றால் ஆயிரம் பேருக்கும் டிராவலிங் அத்தாரிட்டி கொடுக்க வேண்டும்.
டூட்டி பாஸ் தருவார்களா?
1,000 பேருக்கு டூட்டி பாஸ் எதை சொல்லித்தருவார்கள். அதை தருவதற்கே ஆள் இருக்காது. ரயில்வே பணிக்கு எமர்ஜென்சி டூட்டி பாஸ் வழங்க வேண்டும். பாஸ் தராமல் 1,000 பேரை பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து போகச் சொன்னால் ரயில்வே அதிகாரிகளே டிக்கெட் இல்லாமல் 1,000பேரை அனுப்புவது போல் ஆகும். இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் சொந்த ஏற்பாட்டில் வந்தால் அவர்களின் பயணச் செலவுக்கு யார் பணம் தருவது?
நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும் போது கெடுவாய்ப்பாக ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பு? என்பதற்கு ரயில்வே பதில் சொல்லத் தயாராக இல்லை. வேலை ஆட்கள் இழப்பீடு சட்டப்படி (work men compensation act) புக்கிங் செய்வார்களா? இந்த ஏற்பாடு மாநில அரசின் தொழிலாளர் (FACTORY ACT) சட்டத்திற்குட்பட்டு வருமா?
பெரம்பூர் கேரேஜ் & லோகோ பணிமனை தொழிலாளர்கள் என்ன கொத்தடிமைகளா? ஏற்கெனவே சிக்கன நடவடிக்கை யாக நாடு முழுவதும் ஆட்குறைப்பு அமலில் உள்ளபோது இருக்கும் மனித வளத்தையும் இப்படி வீணடிப்பது எந்த வகையில் நியாயம்?
அன்றைய தினம் மட்டும் நான்கு முறை கைரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்போகிறார்களா?
இதுபோன்ற நிகழ்வுகள் இத்துடன் நின்று விடாமல் தொடர்ந்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.