tamilnadu

தமிழக சட்டப்பேரவையில் சதம் அடித்த திமுக!

சென்னை, மே 24-தமிழகத்தில் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 232 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 135 இடங்களை கைப்பற்றியது. இதில், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனித நேய ஜனநாயக கட்சியின் தமிமூன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப் படைகளின் கருணாஸ் ஆகிய மூவரும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக 88 இடங்களிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு நடந்த இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதிமுகவின் பலம் 134 ஆக குறைந்தது. இதற்கிடையே, எடப்பாடியை முதலமைச்சர் பதிலிருந்து நீக்கக்கோரிய தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்டதால் அதிமுகவின் பலம் 113 ஆக குறைந்தது. திருப்பரங்குன்றம் ஏ.கே. போஸ், சூலுர் கனகராஜ் ஆகியோர் மரணமடைந்தனர். ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியானது.சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம், பேரவைத் தலைவரையும் சேர்த்து 113 ஆக இருந்தது. அதிலும் அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் அதிமுக எம்எல்ஏ.க்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்பதால் சட்டப்பேரவையில், அதிமுகவின் பலம் 110ஆகக் குறைந்தது.மேலும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறாமல் இருந்து வந்தனர். இதனால் பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசை உறுதியாக ஆதரிக்கும் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 108 ஆக குறைந்தது. மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தமிமூன் அன்சாரி திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.இந்த நிலையில், 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் குறைந்தது 10 இடங்களில் வெற்றிபெற்றால்தான் சட்டப்பேரவையில், பெரும் பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.  அதிமுக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் சட்டப் பேரவையில் அதிமுகவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு நீடிக்க வேண்டுமென்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை அள்ளிய திமுகவின் 101 உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏ.க்களும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். இதனால் திமுக கூட்டணியின் பலம் 110 ஆக உயர்ந்துள்ளது.சுயேச்சை எம்எல்ஏ தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 3 பேர் மற்றும் கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் எதிர்க்கட்சிகளின் பலம் 116 அதிகரிக்கும்.அதேசமயம், வசந்தகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யாக பதவியேற்றால் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கும் எம்எல்ஏ.க்களின் பலம் 115 ஆக இருக்கும்.

;