சென்னை, டிச. 10 - திருவண்ணாமலையில் இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்படும் என்றும் கிரிவலம் நிச்சயம் நடைபெறும் என்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். ஆண்டுதோறும் கார்த்திகை யை முன்னிட்டு, திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவிலில் மகர ஜோதி ஏற்றப்படுவது வழக்கம். அதை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் வருகை தருவர். இந்தச் சூழலில், பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையில் இந்த ஆண்டு கிரிவலம் நடைபெறுமா? டிசம்பர் 13 அன்று தீபத் திருவிழா நடை பெறுமா? என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக, பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, செவ்வாய்க்கிழமை (டிச.10) அன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொண்டாடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னி ட்டுத் தான் கடந்த அக்டோபர் மாதம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிவல பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பிறகு 6 கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட புயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட இந்த பகுதி போர்க்கால அடிப்படையில் கையாளப் பட்டது. தீபத் திருவிழா தடைபடக்கூடாது என்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் மலை மீது ஏறிச் சென்று, கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர். இதற்கான ஆய்வறிக்கைக்கு பின்னர், 450 கிலோ நெய்யும், 350 கிலோ கொப்பரையும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
எனவே, இதற்கு ஏற்றாற்போல் மனித சக்திகளை பயன்படுத்தி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை உச்சியின் மீது இந்த ஆண்டும் நிச்சயம் தீபம் எரியும். கிரிவலம் நிச்சயம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.