tamilnadu

img

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து டிச. 14 - ஆர்ப்பாட்டம்

சென்னை:
ஜிஎஸ்டி வரிக்கும் அதை உயர்த்துவதென்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும் டிசம் பர் 14ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாநிலத் தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாமானிய மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, இந்தியப் பொருளாதாரத்தை அடியோடு வீழ்த்தியிருக்கிற ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு இரு மடங்காக உயர்த்தப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இதனால் பருப்பு முதல் சமையல் எண்ணெய் வரை அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். ரயில் கட்டணம் உட்பட பல சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கும்.வரிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம் அரசு கஜானாவை நிரப்ப முடியும் என்று பொது அறிவின்றி, ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் அறிவிக்கும் அரசும், அதிகாரிகளும் இதை புரிந்துகொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரிவிகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது, அபத்தமானது. மாறாக மக்கள் விரோத ஜிஎஸ்டி வரியை முழுமையாகக் கைவிட வேண்டும். மக்கள் விரோத ஜிஎஸ்டி வரிக்கு எதிராகவும், அந்த வரியை உயர்த்துவோம் என்கின்ற அரசின் ஆணவத்தைக் கண்டித்தும் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஏ.எம். விக்கிரமராஜா கண்டனம்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. கடந்த கால மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளாலும் ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய கார்ப்பரேட், பெருநிறுவனங்களை அனுமதித்து இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் வணிகம், விவசாயம், உற்பத்தி எனும் பொருளாதார தூண்களை சிதைத்து அச்சுருத்தப்பட்டு தேசமக்கள் துரிதமாக வறுமைகோட்டிற்கு கீழ் கொண்டுவரப் பட்டுள்ளனர்.தேசிய ஜிடிபி எனும் பொருளாதார குறியீடு 7.8இல் இருந்து 4.6 விழுக்காடாக கடந்த காலாண் டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வணிகம் நொடிந்து போயுள்ள தருணத்தில் மீண்டும் ஜிஎஸ்டி வரியில் சீரமைப்பு எனும் நோக்கத்துடன் மத்திய அரசு வரி உயர்வை அறிவித்திருப்பது  வணிகர்களுக்கும், தேசத்திற்கும் இழைக்கப்படும் அநீதியாகும். இதனை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக கைவிடவேண்டும்” என்று கூறியுள்ளார்.

;