tamilnadu

img

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சிபிஎம் வாழ்த்து

தன்னுடைய ‘சூல்’ நாவலுக்காக 2019ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ. தர்மனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. “கரிசல் வட்டார மக்களின் வாழ்க்கையைத் தன் படைப்புகளின் பாடுபொருளாகக் கொண்டு எழுதி வருபவர் எழுத்தாளர் சோ.தர்மன். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் மருமகனான இவர், கோவில்பட்டியை அடுத்த உருளைகுடி கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு சிறு விவசாயி என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்க செய்தி. கரிசல் காட்டு விவசாயம் கண்மாய்களை நம்பி இருந்தது. ஊர் மக்களின் பொறுப்பில் கண்மாய்கள் இருந்தவரை நீர் மேலாண்மையும் சிறப்பாக இருந்தது, விவசாயமும் சிறப்பாக இருந்தது. எப்போது அரசுத்துறைகளின் பிடியில் கண்மாய்கள் கொண்டு செல்லப்பட்டதோ அப்போதிருந்து எங்கள் கண்மாயிலிருந்த ஒருபிடி மண்ணையும்  எங்கள் விவசாயியால் தொடக்கூட முடியவில்லை.விவசாயமும் பாழ்படத்தொடங்கியது” என்று தன் சூல் நாவலின் மூலம் விவசாய வாழ்வைப்பற்றிப் பேசியிருப்பவர் சோ.தர்மன். ஒரு விவசாயியாக வாழ முடியாமல் போனதால், கோவில்பட்டி லாயல் மில்லில் தொழிலாளியாக வாழ நேர்ந்த சோ.தர்மன் தன் வட்டார உழைப்பாளி மக்களின் பாடுகளை சிறுகதைகளாக, நாவல்களாக எழுதி வருகிறார்.

இரவின் மரணம், ஹிம்சை, நசுக்கம், தூர்வை, கூகை, மிதவை போன்ற படைப்புகளைத் தொடர்ந்து 2016இல் அவர் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு தற்போது சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயியாக, ஒரு ஆலைத் தொழிலாளியாக வாழ்ந்து, எழுத்தாளராக மாறிய அவர் சாகித்ய அகாடமி விருது பெற்று சாதனை படைத்திருப்பது மிகுந்த பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்று. பாட்டாளி வர்க்கத்தின் படைப்பாளியான அவரை வாழ்த்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமை கொள்கிறது. அவரது எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறது. 

;