tamilnadu

சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை, மார்ச் 21- சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் இந்த மாதிரியான பெரிய இயந்திரங்கள் மூலம் பெரிய சாலைகளில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் இந்த பெரிய இயந்திரங்கள் மூலம் பெரிய தெருக்களில் விரைந்து கிருமி நாசினி தெளிக்கப்படும். இவை மட்டுமல்லாமல் சிறிய தெருக்களுக்கு பவர் இயந்திரங்கள், கையால் இயக்கப்படும் ஸ்பிரேயர்கள் உள்ளிட்ட 500 இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநாகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளனவா என பரிசோதனை செய்யப்படும், கிருமி நாசினி வாகனம் மூலம் கடற்கரை, வணிக வளாகங்கள், கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு நடைபெறுவதையொட்டி சாலை ஓரங்களில் வசிக்கும் வீடில்லாதவர்களுக்கு 60 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது, அங்கு அவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்படும். பொது மக்கள் தேவைக்காக 24 மணி நேரம் மருத்துவமனைகள் அம்மா உணவகங்கள் இயங்கும். சமூதாய கூடங்களில் ஏற்கனவே நிகழ்ச்சி நடைபெறுவதற்காக பதிவு செய்யப்பட்டு இருந்தால் அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

;