tamilnadu

img

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தனியாருக்கு கொடுக்கக் கூடாது.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்....

சென்னை:
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்க உள்ளதை தவிர்த்து,மாநில அரசின்கீழோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழோ உற்பத்தி செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்  முயற்சியாலும் அரசின் விழிப்புணர்வு நடவடிக்கையாலும் தமிழகத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தாமாக முன்வந்துகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதனால் தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையிலும் ஒன்றிய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் தமிழ்நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டு சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்குப் போதிய தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆகியோர் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தில்லியில் நேரில் சந்தித்து வழங்கினர். இதுவரைக்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அதன் விபரம் வருமாறு:செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கடந்த வாரம் பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். மாநில அரசின் கீழ் இயக்குவது அல்லது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஆலோசித்து அதை நடத்த ஒரு நிறுவனத்தின் கீழ் அனுமதி அளிப்பது எனக் கேட்டிருந்தோம்.ஆனால், தற்போது மத்திய அரசே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் தானே இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி அவசரத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் கீழோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழோ உடனடியாகத் தடுப்பூசிமையத்தை இயக்கும் நடவடிக்கை களைத் தொடங்கிட வேண்டும்.தற்போதுள்ள சூழ்நிலையில் தேசிய சொத்தான தடுப்பூசி மையத்தை முழு உபயோகத்துக்குக் கொண்டுவர நாங்கள் பரிபூரண ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் தமிழக அரசு, மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடும் எண்ணிக்கை யை அதிகப்படுத்தியுள்ளது. கடந்தகடிதத்தில் மக்கள்தொகை அளவுக் கேற்ப தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். 

அரசு மற்றும் அரசு சாரா முறையில் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் டோஸ் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி வெளியிலிருந்து 25.84 டோஸ்களும், அரசு மூலம் 16.74 லட்சம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவை அதிகரித்து அளிக்கவேண்டும். தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரம் ஒதுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிடவேண்டும். தமிழ்நாடு போன்று மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போன்று தமிழகத்துக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்.தற்போதுள்ள நிலையில் தடுப்பூசிஇருப்பு குறைந்துகொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் அளவுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக ஜூன் மாதத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க வேண்டும். இது தடுப்பூசி இயக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். இதை அளிப்பதன் மூலம் அடுத்து வரும் வாரங்களுக்கு தடுப்பூசி இயக்கத்தை எங்களால் விரைவுபடுத்த முடியும்.இதைத் தாங்கள் தனிக்கவனமாக எடுத்து, இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;