tamilnadu

நூற்றாண்டை கடந்த சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

சென்னை,ஜூன் 19- சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வானிலை பதிவுகளை திறம்பட பதிவு செய்ததற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு சேவை புரியும் வகையில் நீண்டகால வானிலை விவரங்களை பதிவு செய்வது மனித குலத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் பாரம்பரிய நடவடிக்கை களில் ஒன்றாகும். அத்தகைய தொடர் வானிலை பதிவுகள், பருவ நிலை மாற்றங்கள் சார்ந்த அறிவியல் மற்றும் பருவநிலை சார்ந்த சேவைகளுக்கு ஆதாரமாக உதவுகின்றன.  குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் உலக வானிலை அமைப்பு தரம் வாய்ந்த நீண்ட கால வானிலை விபரங்களை பதிவு செய்யும் நடைமுறையை ஊக்குவிக்கிறது. அந்த வகையில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக வானிலை பதிவுகளை திறம்பட பதிவு செய்யும் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் சேவையை உலக வானிலை அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வானியல் சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்து வருவதால் இந்த விருது கிடைத்துள்ளதாகவும், இது மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து தரவுகளை கையாள்வதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு மக்கள் பணியில் சென்னை வானிலை ஆய்வு மையம் திறம்பட செயல்படும் என்றும் அவர் கூறினார்.

;