tamilnadu

புல்லரிக்கும் மோடி பக்தர்களும் தமிழுக்கு செய்த துரோகமும்

தமிழகத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச்’சொன்னாராம். புளகாங்கிதம் அடைந்து, புல்லரித்துப் போய் சமூக ஊடகங்களில் பரணி பாடிக் கொண்டிருக்கிறார்கள், மோடி பக்தர்கள்.


உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இந்தித் திணிப்பை வேகப்படுத்துவதையும், தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடைக் கற்களை ஏற்படுத்துவதையும் ஆதிக்க வெறியோடுசெய்து வருகிறது பிஜேபி அரசு.

தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் கீழடி அகழ்வாய்வுக்கு மோடி அரசு போட்ட முட்டுக்கட்டைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் வேண்டுகோளையும் காலில் போட்டு மிதித்து நீட் தேர்வைத் திணித்தது மோடி அரசு. அதில் தமிழில் தேர்வெழுதி, வினாத்தாள் குழப்பம் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் முன்முயற்சியுடன் உயர்நீதிமன்ற ஆணை பெற்று 49 மதிப்பெண்கள் நிவாரணம் பெற்றனர் தமிழக ஏழை, நடுத்தர மாணவர்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு உடனே சென்று, தமிழக மாணவர்களுக்கான மதிப்பெண் நிவாரணத்தைத் தட்டிப் பறித்து, தனது மேலாதிக்க வெறியைத் தீர்த்துக் கொண்டது மோடி அரசு.

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் (மட்டும்) பெயர் எழுதி நோட்டம் பார்த்தது பிஜேபி அரசு. எதிர்ப்பு பலமாக வந்தவுடன் ஓசைப்படாமல் பின்வாங்கிக் கொண்டது.

அவ்வளவு ஏன்? முழுவதும் தமிழ்நாட்டில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்களுக்கு தமிழில் பெயர் சூட்டாமல் அந்த்யோதயா, தேஜஸ் என்று இந்தியில் பெயர் வைக்கிறது மோடி அரசு. இதை எடுத்துச் சொல்பவர்களை நையாண்டி செய்து திமிரோடு பேசித் திரிகிறார்கள் தமிழக பிஜேபி தலைவர்கள்.

இப்போதோ ஒரு படி மேலே போய், நாங்கள் இந்தித் திணிப்பு மட்டும் அல்ல, சமஸ்கிருதத் திணிப்பும் செய்வோம், என்ன செய்வீர்கள் பார்ப்போம் என்று தமிழக மக்களைப் பார்த்து சவால் விடுகிறது பிஜேபி.

சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக பள்ளிக் கல்வியில் சமஸ்கிருதம் புகுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிஜேபி.

தமிழகத்தை ஆளும் ‘அதிமுக’, பிஜேபி-யின் மிரட்டல்களுக்குப் பயந்து ‘மோடிமுக’-வாக மாறிவிட்ட நிலையில், தமிழைப் புறக்கணிப்பதையும், தங்களுடைய ஆதிக்கச் செயல்பாடுகளை நிலைநாட்டுவதற்காக இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பதையும், தயக்கம் எதுவுமின்றிச் செயல்படுத்த முனைகிறது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமான பிஜேபி.


 பிஜேபி-யின் இத்தகைய போக்கிற்கு இருபதாண்டுகளுக்கு முந்தைய ஒருசில நிகழ்வுகளை இப்போது நினைவுகூர வேண்டியுள்ளது.1998-2004 வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதத்தைச் செம்மொழி என்று அறிவித்து, அதற்கான வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கென ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியை ஒதுக்கியது அன்றைய அரசு. 1999 தேர்தலில் மதுரையில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற மார்க்சிஸ்ட் எம்பி தோழர் பொ. மோகன் தனது முதலாவது உரையிலேயே சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்டி ருப்பது போல, பழம் பெருமையும் தொன்மையும் மிக்க தமிழ் மொழிக்கும் செம்மொழிஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை வைத்தார்.அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியதோடு பிரதமருக்கு அடுத்தடுத்துக் கடிதங்களும் அனுப்பினார்.தமுஎகச அமைப்பு நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களைப் புது தில்லிக்கே அழைத்துச் சென்று செம்மொழி கோரிக்கைக்கென தலைநகரில்ஆர்ப்பாட்டம் நடத்தியது.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த ஆர்ப்பாட்டத்தில்தானும் பங்குகொண்டு ஆதரவு நல்கினார்.ஆனால் சமஸ்கிருதத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பிஜேபி அரசாங்கம், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிடும் நியாயம் நிறைந்த கோரிக்கையைக் கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை.2004-ல் இடதுசாரிகள் ஆதரவோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகு தான் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதோடு, தமிழுக்கான உயர் ஆய்வு மையங்களும் உருவாக்கப்பட்டன என்பது என்றுமேமறக்கவியலாத உண்மை வரலாறு.ஆனால் இன்று, தமிழ்மொழியே சமஸ்கிருதத்திலிருந்து தான் தோன்றியது என்று முற்றிலும் கற்பனையான, பொய்யான வாதத்தை முன்வைத்துப் புத்தகம் எழுதியுள்ள முனைவர் நாகசாமி என்ற ஆர்எஸ்எஸ் பேர்வழியைத் தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக நியமித்து, தமிழ்மொழியின் உண்மையான வரலாற்றின் மீதே போர்தொடுக்க முற்பட்டுள்ளது தமிழர் விரோத பிஜேபி அரசு. நாகசாமி நியமனத்தை எதிர்த்துத் தமிழறிஞர்கள் போராடி வருகிறார்கள்.


ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி என்று பேசித் திரியும் ஆர்எஸ்எஸ்-பிஜேபி வகையறாக்களையும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கூட்டணி வைத்துள்ள அதிமுக, பாமக, தேமுதிக-வின் துரோகங்களையும் தமிழக வாக்காளர்கள் நன்றாகவேபுரிந்து வைத்துள்ளார்கள். சித்திரை துவங்கியவுடன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தகுந்த பதிலடியைத் தருவதற்குத் தயாராகவுள்ளார்கள்.


-க.மன்னன்


;