tamilnadu

img

முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருப்பதை பயன்படுத்தி புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி..... திமுக உடனே தலையிட வி.சி.க. - தி.க. வேண்டுகோள்.....

சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக-வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.

தற்போது என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.  இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்குவாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவை சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி  கொரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. புதுவையில்  6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.  புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

கி.வீரமணி 
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவியேற்ற முதல்வர் என். ரங்கசாமியின் ஆட்சி நாற்காலியில் அவர் அமர்வதற்கு முன்பே, அதனை ஆட்டிப் பார்க்கும் வகையிலும், அதன்கீழ் அரசியல் கண்ணிவெடியைப் புதைக்கும் தனது கொடுங்கரத்தை புதுச்சேரியில் பாஜக நீட்டிட முழு ஆயத்தத்தில் இறங்கி விட்டது.இதிலிருந்து புதுவையைக் காப்பாற்றி (அடுத்த கட்டமாக) ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே விடியலை ஏற்படுத்த முடியும். அதற்கு சரியான தலைமை அங்கும் மதச் சார்பற்ற கூட்டணியை தமிழ்நாட்டைப் போல பல களங் கண்டு, லட்சிய ரீதியான பலத்துடன் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாகக் கட்ட வேண்டும்.புதுவை மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள். அங்குள்ள தலைவர்கள் - தன் முனைப்பு, சுய அதிகார ஆசைகளைப் புறந்தள்ளி, லட்சியங்களுக்கே முன்னுரிமை தந்து - மற்ற முற்போக்குக் கொள்கைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆரோக்கிய அரசியலைக் கட்ட இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின்   தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  புதுச்சேரி  பக்கமும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

;