119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் முதலீட்டு உதவித்திட்டம் என்ற “ரயத்து பந்து” திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி குறுவை, சம்பா என ஆண்டுக்கு இரண்டு பருவங்களுக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த “ரயத்து பந்து” திட்டத்திற்கு ஆளும் பிஆர்எஸ் அரசு நவம்பர் 25 அன்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பில் தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைப்படி “ரயத்து பந்து” திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும், அதுகுறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் எதுவும் செய்யக்கூடாது என குறிப்பிட்டிருந்தது.
ஆனால் மாநில நிதி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராக இருக்கும் ஹரிஷ் ராவ் “விவசாயிகள் திங்களன்று (நவ.27) காலை உணவு மற்றும் தேனீர் அருந்தி முடிப்பதற்குள் அவரது வங்கிக் கணக்கில் “ரயத்து பந்து” திட்டப் பணம் செலுத்தப்பட்டிருக்கும்” என விளம்பரம் செய்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி இந்த திட்டத்தின் அனுமதியை திரும்பப் பெற அம்மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. “ரயத்து பந்து” திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ள நடவடிக்கையானது சந்திரசேகர் ராவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.